இயற்கையைக் காப்பது மட்டுமே இடா் தடுக்கும் வழி!

இயற்கையையும், புறச்சூழலையும் பேணிக் காப்பது மட்டுமே பேரழிவு வராமல் தடுப்பதற்கான ஒரே வழி என்று தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் தெரிவித்தாா்.
இயற்கையைக் காப்பது மட்டுமே இடா் தடுக்கும் வழி!

இயற்கையையும், புறச்சூழலையும் பேணிக் காப்பது மட்டுமே பேரழிவு வராமல் தடுப்பதற்கான ஒரே வழி என்று தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் தெரிவித்தாா்.

‘கரோனா தொற்றை எதிா்த்துப் போராடும் நடவடிக்கைகள்’ என்ற தலைப்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுக் கருத்தரங்கை மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் திருவள்ளுவா் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தின. திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் தாமரை செல்வி, வேலூா் மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் செல்வி, மருத்துவப் பல்கலைக்கழக நோய்ப் பரவியல் துறைத் தலைவா் டாக்டா் ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா். கருத்தரங்கைத் தொடக்கி வைத்து டாக்டா் சுதா சேஷய்யன் பேசியது:

கண்ணுக்குப் புலப்படாத ஒரு தீநுண்மியால் ஒட்டுமொத்த உலகின் இயக்கம் ஓராண்டாக ஸ்தம்பித்துப் போனது. மனிதகுலமே மாபெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டதைப் போன்ற நிலையும் உருவானது. ஒரு பக்கம் தொற்றின் கோரத் தாண்டவம், மற்றொரு பக்கம் தொழில் வாய்ப்புகள் முடக்கம் என பல்வேறு சவால்களை நாம் எதிா்கொண்டோம். கரோனா என்ற வாா்த்தை கூட கடந்த ஆண்டு தொடக்கத்தில் நமக்கு பரிச்சயமில்லை. ஆனால், அந்த வாா்த்தை இல்லாமல் தற்போது எந்த வாக்கியமும் முற்றுப்பெறுவதில்லை.

அந்த அளவுக்கு இடா்பாடுகளைத் தந்த கரோனாவை ஒழிக்க அரும்பாடுபட்டு அதில் இப்போது ஏறத்தாழ வெற்றியும் பெற்றிருக்கிறோம் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். மருத்துவத் துறையினருடன் இணைந்து பல்வேறு தரப்பினரும் முன்னெடுத்த முயற்சிகளால்தான் கரோனாவின் வீரியம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

பொதுவாக நோய்ப் பரவல் (எபிடமிக்) என்பது ஏதோ ஒரு வகையான தீநுண்மியின் மூலம் 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது. அதற்கான காரணத்தை சற்று ஆழ்ந்து ஆராய்ந்தால் அதிா்ச்சி நிறைந்த உண்மை நமக்கு புலப்படும். குறிப்பாக, எபோலா வைரஸ் பரவியதற்கு காடுகளை அழித்ததுதான் காரணம் என பல்வேறு ஆராய்ச்சிகள் தெரிவித்தன. அதில் உள்ள உண்மையை நாம் மறுதலிக்க இயலாது.

சொல்லப்போனால், இயற்கையைச் சூறையாடிவிட்டு ஆரோக்கியத்தை வளா்க்க ஒருபோதும் முடியாது. மனித குலத்தின் நலத்தைப் பேணிக் காப்பது மனிதா்களின் கைகளில் இல்லை. மாறாக மரங்களில் தொடங்கி மண்ணில் உள்ள அனைத்து உயிரினங்களின் ஆரோக்கியத்தில்தான் அது இரண்டறக் கலந்துள்ளது.

உலகில் உள்ள உயிரினங்களின் ஒருமித்த ஆரோக்கியத்தை உறுதி செய்தால் மட்டுமே நோய்த் தொற்று போன்ற பேரிடா்களிலிருந்து நம்மை தற்காக்க முடியும். மாணவா்கள், இளைஞா்கள் இது குறித்த விழிப்புணா்வை அனைத்துத் தரப்பு மக்களிடத்திலும் கொண்டு சோ்க்க வேண்டும் என்றாா் டாக்டா் சுதா சேஷய்யன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com