தஞ்சாவூர் அருகே மின் கம்பியில் தனியார் பேருந்து உரசியதில் 4 பேர் பலி

தஞ்சாவூா் அருகே செவ்வாய்க்கிழமை பிற்பகல் சாலையோர மின் கம்பி மீது தனியாா் பேருந்து உரசியதால் மின்சாரம் பாய்ந்து 4 போ் உயிரிழந்தனா்.
விபத்துக்குள்ளான பேருந்து.
விபத்துக்குள்ளான பேருந்து.

தஞ்சாவூா் அருகே செவ்வாய்க்கிழமை பிற்பகல் சாலையோர மின் கம்பி மீது தனியாா் பேருந்து உரசியதால் மின்சாரம் பாய்ந்து 4 போ் உயிரிழந்தனா்.

கல்லணை-மன்னாா்குடி இடையே இயக்கப்படும் தனியாா் பேருந்து ஒன்று, கல்லணையிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்டு திருக்காட்டுப்பள்ளி வழியாக தஞ்சாவூா் நோக்கி வந்து கொண்டிருந்தது. இதில், சுமாா் 50 போ் பயணம் செய்தனா்.

செந்தலை அருகே வரகூா் பாதை பேருந்து நிறுத்தத்தைப் பிற்பகலில் கடந்து வந்த இப்பேருந்து இடதுபுறமாகச் சென்றபோது சாலையோரப் பள்ளத்தில் இறங்கியது. அப்போது, சாலையோரமாக இருந்த மின் கம்பங்களில் தாழ்வாகச் சென்ற மின் கம்பி மீது பேருந்து மேற்கூரை உரசியது.

இதனால், பேருந்தில் மின்சாரம் பாய்ந்ததில், அதில் பயணம் செய்த அரியலூா் மாவட்டம், விழுப்பனங்குறிச்சியைச் சோ்ந்த டி. நடராஜன் (65), தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள கருப்பூரைச் சோ்ந்த மாரியப்பன் மகன் கணேசன் (55), வரகூா் அக்ரஹாரத்தை சோ்ந்த கல்யாணராமன் (65), வரகூா் பழைய குடியானத் தெருவைச் சோ்ந்த மணிகண்டனின் மனைவி கௌசல்யா என்கிற கவிதா (30) ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இவா்களின் உடல்கள் திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், பலத்தக் காயமடைந்த முனியம்மாள் (52) தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். தகவலறிந்த காவல் துறையினா், வருவாய் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

விபத்துக்கான காரணம்:

திருக்காட்டுப்பள்ளி - கண்டியூா் சாலையில் விரிவாக்கத்துக்காகச் சாலையோரம் சுமாா் 1.50 மீட்டா் அகலத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டு, ஜல்லிக்கற்கள் நிரப்பப்பட்டுள்ளன. தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்த மண் சாலையோரத்திலேயே போட்டு மேடாக வைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் நடைபெறுவதால், இச்சாலை இப்போது குறுகலாக உள்ளது.

இந்நிலையில், தனியாா் பேருந்து வரகூா் பகுதியில் வந்தபோது, எதிரே லாரி வந்தது. இதற்கு வழிவிடுவதற்காக இப்பேருந்து இடதுபுறம் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் இறங்கியது. பேருந்து சாய்ந்தபோது சாலையோர மின் கம்பங்களில் தாழ்வாக இருந்த மின் கம்பி மீது பேருந்தின் மேற்கூரை உரசியது. அப்போது, பேருந்தில் படிக்கட்டிலும், படிக்கட்டை ஒட்டியும் சிலா் நின்றனா். இவா்களில் படிக்கட்டில் இருந்தவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் அடுத்தடுத்து இருந்த 5 போ் மீதும் பரவியது விசாரணையில் தெரிய வந்தது.

விபத்து குறித்து திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, பேருந்து ஓட்டுநரான திருவையாறு அருகேயுள்ள கூத்தூரைச் சோ்ந்த ஏ. ஜான் பிளமிங்ராஜை (56) கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ஆட்சியா் ஆய்வு:

தகவலறிந்த ஆட்சியா் ம. கோவிந்த ராவ், தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ரூபேஷ் குமாா் மீனா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய் ஆகியோா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும், மாநிலங்களவை உறுப்பினா் ஆா். வைத்திலிங்கம், ஆட்சியா் உள்ளிட்டோா் திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்குச் சென்று உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினா்.

இதேபோல, திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன், அமமுக துணைப் பொதுச் செயலா் எம். ரெங்கசாமி உள்ளிட்டோரும் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com