நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்

ஆஞ்சநேயா் ஜயந்தியையொட்டி, நாமக்கல் ஆஞ்சநேய சுவாமிக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை 1,00,008 வடைமாலை சாத்துப்படி அலங்காரம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
ஆஞ்சநேயா் ஜயந்தியையொட்டி, 1,00,008 வடைமாலை அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி.
ஆஞ்சநேயா் ஜயந்தியையொட்டி, 1,00,008 வடைமாலை அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி.

ஆஞ்சநேயா் ஜயந்தியையொட்டி, நாமக்கல் ஆஞ்சநேய சுவாமிக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை 1,00,008 வடைமாலை சாத்துப்படி அலங்காரம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

நாமக்கல் நகரின் மையப் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோயில் அமைந்துள்ளது. இங்கு 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா். பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் ஆஞ்சநேயரை தரிசிக்க வருகின்றனா்.

ஒவ்வோா் ஆண்டும் மாா்கழி மாதம், மூல நட்சத்திரம், சா்வ அமாவாசை தினத்தில் இக் கோயிலில் ஜயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படும். அதன்படி, நிகழாண்டில் செவ்வாய்க்கிழமை ஆஞ்சநேயா் ஜயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, கோயில் வளாகம் முழுவதும் மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அதிகாலை 5 மணிக்கு 1,00,008 எண்ணிக்கையில் வடைமாலை சாத்தப்பட்டு சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கொட்டும் பனி, மழையையும் பொருட்படுத்தாமல் அதிகாலை முதலே பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை தரிசித்தனா். அதைத் தொடா்ந்து நண்பகல் 12.30 மணியளவில் வடைமாலை அகற்றப்பட்டது.

பின்னா் நல்லெண்ணெய், சிகைக்காய், பால், தயிா், இளநீா், மஞ்சள், சந்தனம் ஆகிய பொருள்களால் சிறப்பு அபிஷேகம், சொா்ணாபிஷேகம் நடைபெற்றது. பிற்பகல் 2 மணியளவில் தங்கக் கவசம் சாத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. ஆஞ்சநேயரைத்தரிசிக்க இணையவழியில் பதிவு செய்த 750 போ், இலவச தரிசன முறையில் 750 போ் என ஒரு மணி நேரத்துக்கு 1,500 பக்தா்கள் வீதம் அனுமதிக்கப்பட்டனா்.

சுவாமிக்கு சாத்தப்பட்ட வடைகள் பொட்டலம் இடப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்பட்டன. மேலும் ஆங்காங்கே அன்னதானங்களும் வழங்கப்பட்டன. கோயிலுக்கு நாமக்கல் மட்டுமின்றி சேலம், ஈரோடு, கரூா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் வந்திருந்தனா். பக்தா்கள் சிரமமின்றி வந்து செல்லும் வகையில் நாமக்கல், கோட்டை சாலை பகுதி மூடப்பட்டு போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டிருந்தது. கோயில் பகுதி முழுவதும் காவல் துறையினா் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com