மேலும் 20 ஆயிரம் தடுப்பூசிகள் தமிழகம் வந்தடைந்தன

மேலும் 20 ஆயிரம் தடுப்பூசிகள் தமிழகம் வந்தடைந்தன

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதிலிருந்து 20 ஆயிரம் ‘கோவேக்சின்’ கரோனா தடுப்பு மருந்துகள் தமிழகத்துக்கு புதன்கிழமை வந்தடைந்தன. அவை, மாநில மருந்து சேமிப்புக் கிடங்கில் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டுள்ளன.


சென்னை: தெலங்கானா மாநிலம், ஹைதராபாதிலிருந்து 20 ஆயிரம் ‘கோவேக்சின்’ கரோனா தடுப்பு மருந்துகள் தமிழகத்துக்கு புதன்கிழமை வந்தடைந்தன. அவை, மாநில மருந்து சேமிப்புக் கிடங்கில் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

கரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து ஆராய்ச்சியைப் பொருத்தவரை, புணேவில் உள்ள சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் தடுப்பூசியும், ஹைதராபாதில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியும் அனைத்து நிலைகளிலும் வெற்றி பெற்றன. இதையடுத்து, அவ்விரு மருந்துகளுக்கும் மத்திய அரசு அனுமதி அளித்தது.

அதன் பேரில், நாடு முழுவதும் அந்த மருந்துகளை அனுப்புவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தைப் பொருத்தவரை மருத்துவா்கள், செவிலியா்கள் உள்பட 6 லட்சம் முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்காக செவ்வாய்க்கிழமை காலை புணேவில் இருந்து தமிழகத்துக்கு 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்துகள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தன. சென்னையில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அந்த மருந்துகள், தமிழகத்தில் உள்ள 45 சுகாதார மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டன.

இந்நிலையில், பாரத் பயோ டெக் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 20 ஆயிரம் ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்துகள் ஹைதராபாதில் இருந்து சென்னைக்கு புதன்கிழமை விமானம் மூலம் கொண்டு வரப்பட்டன. அவை பிரத்யேக வாகனம் மூலமாக, உடனடியாக விமான நிலையத்தில் இருந்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருந்து சேமிப்புக் கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது.

அதனை சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தாா். ஆய்வின்போது பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம், சுகாதாரத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா். தமிழகத்துக்கு இதுவரை 5 லட்சத்து 56 ஆயிரத்து 500 ‘டோஸ்’ தடுப்பு மருந்துகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. அவை அனைத்தும், வரும் 16-ந்தேதி முதல் படிப்படியாக முன்களப் பணியாளா்களுக்கு செலுத்தப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com