போடி பாலார்பட்டியில் பென்னிகுவிக் பொங்கல் விழா: மாட்டு வண்டியில் வந்த துணை முதல்வர்

போடி பாலார்பட்டியில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற பென்னிகுவிக் பொங்கல் விழாவில் மாட்டு வண்டி ஓட்டி வந்து பங்கேற்றார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
போடி பாலார்பட்டியில் பென்னிகுவிக் பொங்கல் விழா: மாட்டு வண்டியில் வந்த துணை முதல்வர்
போடி பாலார்பட்டியில் பென்னிகுவிக் பொங்கல் விழா: மாட்டு வண்டியில் வந்த துணை முதல்வர்


போடி: போடி பாலார்பட்டியில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற பென்னிகுவிக் பொங்கல் விழாவில் மாட்டு வண்டி ஓட்டி வந்து பங்கேற்றார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்காக முல்லை பெரியாறு அணையை ஆங்கிலேய பொறியாளர் கர்னல் பென்னிகுவிக் கட்டினார். அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த தினமான ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகையின்போது தேனி மாவட்டத்தில் பென்னிகுவிக் பொங்கலாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 180-ஆவது பிறந்த தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சுற்றுலா துறை சார்பில் தேனி மாவட்டம் போடி அருகே பாலார்பட்டியில் பொங்கல் விழா நடைபெற்றது.

விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு பொங்கல் வைக்கும் மைதானத்திற்கு வந்தார். அவருடன் தேனி ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.ப.ரவீந்திரநாத், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியில் துணை முதல்வர் பங்கேற்றார். உரியடி நிகழ்ச்சியையும் அவர் தொடங்கி வைத்தார்.

பென்னிகுவிக் பொங்கல் விழாவில், 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பென்னிகுவிக் உருவ படத்துடன் ஊர்வலமாக சென்றனர். பின்னர் பெண்கள் பென்னிகுவிக் மண்டபம் முன் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். தங்கள் நிலங்களில் விளைந்து முதன் முதலில் அறுவடை செய்த பயிர்களை படைத்து வழிபட்டனர்.

22 ஆவது ஆண்டாக பாலார்பட்டியில் நடைபெறும் பென்னிகுவிக் பொங்கல் விழாவில் சுற்றுலா துறை சார்பில் கரகாட்டம், தேவராட்டம், தப்பாட்டம், மங்கல மேள வாத்திய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் பென்னிகுவிக் பேரவை செயலாளர் ஆண்டி மற்றும் நிர்வாகிகள் கிராம மக்கள் பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com