பள்ளிகள் திறப்பு குறித்து அழுத்தம் இல்லாமல் சுதந்திரமாக அரசு முடிவெடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டும். எந்தவித அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாக முடிவெடுக்க அரசை அனுமதிக்க வேண்டும் என  உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு குறித்து அழுத்தம் இல்லாமல் சுதந்திரமாக அரசு முடிவெடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்
பள்ளிகள் திறப்பு குறித்து அழுத்தம் இல்லாமல் சுதந்திரமாக அரசு முடிவெடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்

சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டும். எந்தவித அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாக முடிவெடுக்க அரசை அனுமதிக்க வேண்டும் என  உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில்,  செங்கல்பட்டு மாவட்ட தனியார் பள்ளிகள் சங்க செயலாளர் வித்யாசாகர் தாக்கல் செய்த மனுவில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 2020 - ஆம் ஆண்டு மார்ச்  மாதத்தில் பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்கள் 24 மணி நேரமும் வீட்டில்  முடங்கியுள்ளனர்.

அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், 22.3 சதவீத இளம் மாணவ,  மாணவியருக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. கரோனா பொதுமுடக்க  காலத்தில் மாணவ, மாணவியர் தூக்கமின்மை, ஆரோக்கிய குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போன்று குழந்தைகளின் நடத்தை, உணர்வுகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக 87 சதவீத பெற்றோர்  கருத்து தெரிவித்துள்ளனர். 

இயல்பு நிலை எப்போது திரும்பும் என்ற நிச்சயமற்ற நிலையில், கல்விச் சுமையும் மாணவர்களின் மனநலத்தை பாதிக்கச் செய்வதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. தற்போது, பொதுமுடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, குழந்தைகள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதித்துள்ள நிலையில், மாணவர்களின் நலன் கருதி, 50 சதவீத மாணவர்களுடன் இரண்டு அமர்வுகளாக தலா 3 மணி நேரம் வகுப்புகள் நடத்தும் வகையில் கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி அனைத்து பள்ளிகளையும் திறக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி,  நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக பள்ளிக்கல்வித் துறை தரப்பில், தற்போது 10 மற்றும் 12 -ஆம் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  பள்ளிகள் திறப்பு குறித்த சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டியது மாநில அரசு தான். பள்ளிகள் திறப்பது முக்கியமானது என்றாலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.  அதேநேரம் பள்ளிகள் திறப்பு தொடர்பாக, எந்த அழுத்தமும் இல்லாமல், அரசு சுதந்திரமாக முடிவெடுக்க அனுமதிக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். 

நாடு முழுவதும் தற்போது தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், தற்போதைய நிலையில் இந்த வழக்கு முன் கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ளதால்,  இன்னும் 8 முதல் 10 வாரங்களில் பள்ளிகள் திறப்பு குறித்து அரசு முடிவெடுக்காவிட்டால் மனுதாரர் மீண்டும் புதிதாக வழக்கு தொடரலாம் எனக் கூறி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com