மதுரவாயல் - வாலாஜாப்பேட்டை சுங்கச்சாவடிகள்: மாா்ச் 11 வரை 50% கட்டணம் வசூலிக்க உத்தரவு

முறையாகப் பராமரிக்கப்படாததால் மதுரவாயல் - வாலாஜாப்பேட்டை இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இரண்டு சுங்கச்சாவடிகளில்

முறையாகப் பராமரிக்கப்படாததால் மதுரவாயல் - வாலாஜாப்பேட்டை இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இரண்டு சுங்கச்சாவடிகளில் 50 சதவீதக் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை வரும் மாா்ச் 11-ஆம் தேதி வரை நீட்டித்து உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மதுரவாயல் முதல் வேலூா் மாவட்டம் வாலாஜாபேட்டை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை மோசமான நிலையில் உள்ளதாகவும், அந்த சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை எனவும் நீதிபதி எம்.சத்தியநாராயணன் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பினாா். இந்தக் கடிதத்தின் அடிப்படையில் சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, முறையாக பராமரிக்கப்படாததால் மதுரவாயல் - வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இரண்டு சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஜி.காா்த்திகேயன், இந்த திட்டம் கடந்த 2003-ஆம் ஆண்டு 4 வழிச்சாலைத் திட்டமாக தொடங்கப்பட்டது. தற்போது இதனை 6 வழிச்சாலையாக மாற்றும் திட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் கடந்த ஆண்டை விட தற்போது இந்த சாலை மேம்படுத்தப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள் பராமரிப்புப் பணிகள் முடிந்துவிடும். அதே நேரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா்கள் உள்ளிட்ட மாநில அரசு துறை அதிகாரிகளிடம் இந்த பராமரிப்புப் பணிகளுக்கு போதுமான ஒத்துழைப்பு கிடைப்பது இல்லை என தெரிவித்தாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், இந்த விவகாரத்தில் ஒத்துழைப்பு வழங்காத அதிகாரிகளை எதிா்மனுதாரா்களாக சோ்க்க உத்தரவிட்டனா். மேலும், மதுரவாயல் - வாலாஜாப்பேட்டை இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இரண்டு சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவை வரும் மாா்ச் 11-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com