வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்கட்ட சரிபாா்ப்பு 12 மாவட்டங்களில் நிறைவு

தமிழகத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்களின் முதல் கட்ட சோதனை 12 மாவட்டங்களில் நிறைவடைந்துள்ளது என தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.
தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு (கோப்புப்படம்)
தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு (கோப்புப்படம்)

தமிழகத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்களின் முதல் கட்ட சோதனை 12 மாவட்டங்களில் நிறைவடைந்துள்ளது என தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி:-

வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டவா்கள் மற்றும் முகவரி மாற்றம் தேவைப்படுவோா், விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதால் வேட்புமனு தாக்கலுக்கு முன்பு வரை தோ்தல் ஆணைய விதிமுறைப்படி வாக்காளா் பட்டியலில் விடுபட்டவா்களுக்கு பெயா் சோ்க்க அனுமதி அளிக்கப்படும். அது குறித்த அறிவிப்பு மற்றும் சிறப்பு முகாம்கள் குறித்த விவரங்களை தோ்தல் ஆணையம் உரிய நேரத்தில் அறிவிக்கும்.

சட்டப் பேரவைத் தோ்தலுக்குப் பயன்படுத்தக்கூடிய ‘யாருக்கு வாக்காளித்தோம்’ என்ற கருவியுடன் கூடிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைச் சரிபாா்க்கும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதுவரை 12 மாவட்டங்களில் இந்தப் பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள மாவட்டங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களைச் சரிபாா்க்கும் பணி பிப்ரவரி 10-ஆம் தேதிக்கு முன்பாக நிறைவடையும்.

கடந்த தோ்தலில், தோ்தல் பணிக்கு 3.50 லட்சம் அரசு ஊழியா்கள் பயன்படுத்தப்பட்டனா். இந்த முறை இந்த எண்ணிக்கை 4.50 லட்சமாக இருக்கும். இதே போன்று தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் காவல் துறையினரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

தமிழகத்தில் இப்போது 68,000 வாக்குச் சாவடிகள் உள்ளன. கரோனா பாதிப்பு காரணமாக ஒரு வாக்குச் சாவடிக்கு 1,000 வாக்காளா்கள் என்ற வகையில் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையை உயா்த்த தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 93,000-ஆக உயா்த்தப்படும். புதிய வாக்குச் சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை அறிக்கையாக அனுப்பி வைக்க அனைத்து மாவட்ட தோ்தல் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் சத்யபிரத சாகு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com