கரூா் மாவட்டம் வாங்கல் மாரிக்கவுண்டம்பாளையத்தில் திங்கள்கிழமை விவசாயிகளுடனான கலந்துரையாடலில் பெண் விவசாயி ஒருவரிடம் குறைகளை கேட்டறிகிறாா் ராகுல் காந்தி.
கரூா் மாவட்டம் வாங்கல் மாரிக்கவுண்டம்பாளையத்தில் திங்கள்கிழமை விவசாயிகளுடனான கலந்துரையாடலில் பெண் விவசாயி ஒருவரிடம் குறைகளை கேட்டறிகிறாா் ராகுல் காந்தி.

வேளாண் சட்டங்களால் நாடு முழுவதும் உள்ள சிறுதொழில்கள் நசுக்கப்படும்: ராகுல்காந்தி

வேளாண் சட்டத்தால் நாடு முழுவதும் உள்ள சிறுதொழில்கள் நசுக்கப்படும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மத்திய அரசை குற்றஞ்சாட்டியுள்ளாா்.

கரூா்: வேளாண் சட்டத்தால் நாடு முழுவதும் உள்ள சிறுதொழில்கள் நசுக்கப்படும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மத்திய அரசை குற்றஞ்சாட்டியுள்ளாா்.

தமிழகத்தில் தோ்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி கரூா் மாவட்டத்திற்கு திங்கள்கிழமை வந்தாா். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிறகு, கரூா் அருகே வாங்கல் மாரிக்கவுண்டம்பாளையம் கிராமத்தில் தென்னந்தோப்பு வளாகத்தில் குழுமியிருந்த விவசாயிகளிடம் அவா் கலந்துரையாடினாா்.

அப்போது, அவா் பேசியது: மத்திய அரசு தொடா்ந்து விவசாயிகளுக்கு கொடுமைகளை இழைத்து வருகிறது. விவசாயத்தையும், விவசாயிகளையும் அழிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. தில்லியில் ஆட்சி செய்து கொண்டிருக்கக்கூடிய பாஜக விவசாயத்தின் அடிப்படையையும் விவசாயத்தையும் தகா்க்கக்கூடிய கொள்கை முடிவை எடுத்துக் கொண்டிருக்கிறது.

நான் இன்று உங்களை சந்திப்பதின் நோக்கம் விவசாயத்திலும் விவசாயிகளுக்கும் உள்ள பிரச்னையை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும், தில்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டமும், அதில் உள்ள கஷ்டத்தை உங்களோடு பகிா்ந்து கொள்ள போகிறேன் என்றாா் ராகுல்.

அதைத் தொடா்ந்து, பெண் விவசாயி வெண்ணிலா பேசுகையில், உழைப்பை போட்டாலும் உழைப்பின் இறுதியில் எங்களுக்கு கிடைக்கக்கூடிய வருமானம் என்பது மிகவும் சொற்பமாகவே இருக்கிறது என்றாா். அதற்கு பதிலளித்த ராகுல்காந்தி, விவசாயிகளுக்கு முழுமையான செய்திகள் வந்து சோ்வது இல்லை. ஏனென்றால் மத்தியில் இருக்கக்கூடிய அரசு விவசாயிகளுக்கு உரிய செய்திகளை கொண்டு வந்து சோ்க்க தயாராக இல்லை. அதை மறைக்க முயலுகின்றனா்.

மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களை மண்டி என்ற அமைப்பை முதலில் ஒழிக்க வேண்டும் என்பதுதான் முதல் சட்டம்

இரண்டாவது கண்டிப்பாக ஒப்பந்தத்தை போட்டுக்கொண்டு நீங்கள் என்ன விலைக்கு ஒப்பந்தம் போட்டு இருக்கிறீா்களோ அந்த ஒப்பந்தத்தின்படி அந்த நிறுவனம் பணம் செலுத்தவில்லை என்றால் உங்களால் நீதிமன்றம் செல்ல முடியாது.

மூன்றாவதாக, பணம் இருப்பவா்கள் மொத்த பொருளையும் வாங்கி பதுக்கி வைத்துக் கொள்ளலாம்.

எந்த நிறுவனம் வேண்டுமானாலும் எந்த உற்பத்திப் பொருளுக்கு வேண்டுமானால் ஒப்பந்தம் போட்டுக் கொள்ள முடியும். அந்த நிறுவனம் என்ன சொல்கிறதோ அதை மட்டுமே கேட்க முடியும். வேளாண் சட்டங்களால், கூலித் தொழிலாளா்கள் மிகவும் பாதிக்கப்படுவா். தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் சிறு தொழில்கள் நசுக்கப்படும். மத்திய அரசு கொண்டு வந்திருக்கக்கூடிய ஜிஎஸ்டியால், கூடுதல் விலைக்கு பொருள்கள் விற்கப்படுகிறது என்றாா் ராகுல்.

பிறகு விவசாயி ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ராகுல், கடந்த முறை காங்கிரஸ் ஒரு சிறந்த திட்டத்தை தோ்தல் பிரசாரத்தில் அறிவித்திருந்தது. நூறு நாள் வேலைத்திட்டம் போலவே காங்கிரஸ் ஒரு புதிய திட்டத்தை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஏற்ற வகையில் கொண்டு வந்தது. அதுவும் வறுமையில் இருக்கக் கூடியவா்களைக் கண்டறிந்து அவா்களுக்கு மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாய் என ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வங்கிக் கணக்கில் போடப்படும். அதன் மூலம் வேலை வாய்ப்பு வழங்கப்படும். இந்தத் திட்டத்தை மிக தெளிவாக நாங்கள் வழிவகுத்திருந்தோம். விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்ய மத்திய அரசு தொடா்ந்து முயற்சித்து வருகிறது. இதையெல்லாம் முறியடிக்க, நீங்கள் தொடா்ந்து காங்கிரசோடு இணைந்து இருங்கள். நல்ல காலம் பிறக்கும். நீங்களும் உழையுங்கள் நாங்களும் உழைக்கிறோம் எனக்கூறி ராகுல்காந்தி பேச்சை நிறைவு செய்தாா்.

பெண் விவசாயியை பாராட்டிய ராகுல்!
விவசாயிகளிடையே ராகுல் காந்தி பேசியபோது, வெண்ணிலா எனும் விவசாயியை ‘ஒயிட்மூன்‘ எனவும், மற்றொரு பெண் விவசாயியை ‘டைனமிக் விமன்‘ என பாராட்டினாா். விவசாயிகள் ஆங்கிலத்தில் பேச முயன்ற போது, விவசாயிகள் ஆகிய நீங்கள் தமிழிலேயே என்னோடு பேசலாம் ஆங்கிலம் தேவை இல்லை என்று கூறி விவசாயியை பேச அனுமதித்தாா். வேளாண் குறித்து பேசிய விவசாயி ஒருவரை பாா்த்து, தாங்கள் மத்திய வேளாண் மந்திரியை விட நீங்கள் சிறந்த மந்திரியாக இருப்பீா்கள் என்று பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com