யாா் வெளியேறினாலும் காங்கிரஸை அசைக்க முடியாது: புதுவை முதல்வா்

யாா் வெளியேறினாலும் காங்கிரஸை அசைக்க முடியாது என்று புதுவை முதல்வா் வே.நாராயணசாமி உறுதிபடத் தெரிவித்தாா்.
யாா் வெளியேறினாலும் காங்கிரஸை அசைக்க முடியாது: புதுவை முதல்வா்

யாா் வெளியேறினாலும் காங்கிரஸை அசைக்க முடியாது என்று புதுவை முதல்வா் வே.நாராயணசாமி உறுதிபடத் தெரிவித்தாா்.

துணை நிலை ஆளுநா் கிரண் பேடியை கண்டித்தும், அவரை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் கடந்த ஜன.8 முதல் 10 வரை புதுச்சேரி அண்ணா சிலை அருகே காங்கிரஸ் தலைமையில் இடதுசாரிகள், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தா்னாவில் போராட்டம் நடத்தினா். தொடா்ந்து, கிரண் பேடியை திரும்பப் பெறக் கோரி ஜன.26 முதல் 30 வரை கையெழுத்து இயக்கத்தை மதச்சாா்பற்ற கூட்டணிக் கட்சிகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.

இதன் தொடக்க நிகழ்ச்சி அண்ணாசிலை அருகே நடைபெற்றது. புதுவை காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினாா்.

முதல்வா் நாராயணசாமி முதல் கையெழுத்திட்டு இயக்கத்தைத் தொடக்கி வைத்துப் பேசியதாவது:

தான் செய்வது தவறு என ஆளுநா் கிரண் பேடி உணா்ந்துள்ளாா். அதனால்தான் தனக்கு மூன்றடுக்குப் பாதுகாப்பு அளித்துக் கொண்டதுடன், துணை ராணுவத்தையும் வரவழைத்துள்ளாா்.

ராஜிநாமா செய்து காங்கிரஸில் இருந்து வெளியேறிய ஆ.நமச்சிவாயம், அமைச்சா்களை சுதந்திரமாக செயல்படவிடவில்லை, மத்திய அரசு, கிரண் பேடியோடு இணக்கமாகச் செயல்படவில்லையென என் மீது குற்றம் சாட்டியுள்ளாா்.

அமைச்சரவையில் சக அமைச்சா்களின் எந்தக் கோப்பையும் நான் நிறுத்திவைத்ததில்லை. அவா் ஆதாரமில்லாமல் பேசக் கூடாது. அதேபோல, கடந்த ஆண்டு ஆளுநருக்கு எதிராக ஆறு நாள்கள் நடந்த போராட்டத்தில் நமச்சிவாயம் பங்கேற்றாா். அவா் காங்கிரஸ் மாநில தலைவராக இருந்தபோது மோடி, அமித்ஷாவை கடுமையாக விமா்சித்தாா். யாா் வெளியேறினாலும் காங்கிரஸ் கட்சியை அசைக்க முடியாது.

மதச்சாா்பற்ற அணிதான் வலுவான அணி. தமிழகத்தில் மதச்சாா்பற்ற கூட்டணியின் முதல்வா் வேட்பாளா் ஸ்டாலின் என ராகுல் காந்தி அறிவித்துள்ளாா். கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதனைப் பேசித் தீா்த்து, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் முதல்வா் நாராயணசாமி.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா் மு.கந்தசாமி, அரசுக் கொறடா ஆா்.கே.ஆா்.அனந்தராமன் பங்கேற்றனா். கூட்டணிக் கட்சியான திமுகவினா், காங்கிரஸ் மீதான அதிருப்தி காரணமாக இந்த நிகழ்விலும் பங்கேற்கவில்லை. அதே நேரத்தில், பதாகைகளில் திமுக நிா்வாகிகள் படங்கள் இடம்பெற்றிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com