மானாமதுரை: வைகை ஆற்றுக்குள் இடிந்துபோன தடுப்பணையை கட்ட விவசாயிகள் வலியுறுத்தல் 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் முத்தனேந்தல் வைகையாற்றில் இடிந்துபோன தடுப்பணையை மீண்டும் கட்டித்தர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
மானாமதுரை அருகே முத்தனேந்தல்- இடைக்காட்டூர் இடையே கட்டப்பட்டு தண்ணீர் வரத்து தாங்காமல் இடிந்துபோன தடுப்பணை.
மானாமதுரை அருகே முத்தனேந்தல்- இடைக்காட்டூர் இடையே கட்டப்பட்டு தண்ணீர் வரத்து தாங்காமல் இடிந்துபோன தடுப்பணை.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் முத்தனேந்தல் வைகையாற்றில்  இடிந்துபோன தடுப்பணையை மீண்டும் கட்டித்தர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

முத்தனேந்தல்-இடைக்காட்டூர் இடையே வைகை ஆற்றின் குறுக்கே கடந்த 2006 ஆம் ஆண்டு  தமிழக அரசு பொதுப்பணித்துறை மூலம் தடுப்பணை கட்டப்பட்டது. அணை கட்டப்பட்ட சில மாதங்களிலேயே வைகை ஆற்றில் வந்த தண்ணீரின் வரத்து தாங்காமல் தடுப்பணையின் ஒரு பகுதி இடிந்தது. காலப்போக்கில் தடுப்பணையின் மற்ற பகுதிகளும் இடிந்து சாய்ந்தது. 

இந்த தடுப்பணை மூலம் முத்தனேந்தல் இடைக்காட்டூர், மிளகனூர் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு பாசன வசதி கிடைத்து வந்தன. மேலும் இப்பகுதியில் செயல்படும் குடிநீர் திட்டங்களுக்கு ஆதாரமாகவும் இந்த தடுப்பணை இருந்து வந்தது. தடுப்பணை கட்டி சில மாதங்களிலேயே அணை உடைந்து போனதால் இப்பகுதி மக்கள் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதைத்தொடர்ந்து உடைந்துபோன தடுப்பணையை மீண்டும் கட்டித்தர வலியுறுத்தி இப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் தமிழக அரசை வலியுறுத்தியும் இதுவரை இக் கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை.
எனவே, இனியாவது தமிழக அரசு நடவடிக்கை எடுத்து இடிந்துபோன முத்தனேந்தல் இடைக்காட்டூர் இடையில்  வைகை ஆற்றக்குள் மீண்டும் தடுப்பணை கட்டி தர வேண்டும் என்று விவசாயிகளும் பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து இப்பகுதியில் வசிக்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த காசிராஜன் கூறியதாவது: மேற்கண்டதடுப்பணை கட்டி சில மாதங்களிலேயே தண்ணீர் வரத்து தாங்காமல் உடைந்து விட்டது. இது குறித்து விசாரணை நடத்தி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது நடக்கவில்லை. எனவே இப்பகுதியில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறவும் நிலத்தடி நீராதாரம் உயரவும் மேற்கண்டபகுதியில் புதிதாக தடுப்பணை கட்டவேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com