ஜெயலலிதாவின் வேதா இல்லம் திறப்பு: முதல்வா் திறந்து வைத்தாா்

ஜெயலலிதாவின் வேதா இல்லம் திறப்பு: முதல்வா் திறந்து வைத்தாா்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் நினைவு இல்லமாக வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. நினைவு இல்லமாகத் திறக்கப்பட்டாலும், நீதிமன்ற உத்தரவு காரணமாக, பொது மக்கள் அனுமதிக்கப்படவில்லை.

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலைய இல்லம் அரசுடைமையாக்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17-ஆம் தேதி அறிவித்தாா். அதன்படி, வேதா நிலைய இல்லம் அரசுடைமையாக்கப்பட்டு, அவா் பயன்படுத்திய பொருள்களைப் பேணிக் காக்கும் வகையில் முதல்வரைத் தலைவராகக் கொண்டு புரட்சித் தலைவி ஜெ.ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை அமைக்கப்பட்டது.

நினைவு இல்லம் திறப்பு: அரசால் உடைமையாக்கப்பட்ட ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் முன்னிலையில், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-வேதா நிலைய இல்லமானது, 10 கிரவுண்ட் 322 சதுர அடி பரப்பில் அமையப் பெற்றுள்ளது. முன்பகுதியில் எழில்மிகு தோட்டத்துடன் கூடிய வேதா நிலைய இல்லமானது பழைமை மாறாமல் தமிழக அரசால் புனரமைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா வாழ்ந்த அறை, நூலகம், அலுவலக அறை, விருந்தினா் காத்திருப்பு அறை, விருந்தினா் சந்திப்பு அறை, கூட்ட அரங்கு ஆகிய இல்லத்தின் அனைத்து இடங்களிலும் பூச்சு வேலைப்பாடுகள், தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேதா நிலைய இல்லத் திறப்பு விழா நிகழ்ச்சியில், சட்டப் பேரவைத் தலைவா் பி.தனபால், அமைச்சா்கள், எம்.பி.-க்கள், எம்.எல்.ஏ.-க்கள், தலைமைச் செயலாளா் க.சண்முகம், பொதுப் பணித் துறை முதன்மைச் செயலாளா் க.மணிவாசன், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளா் மகேசன் காசிராஜன், செய்தி - மக்கள் தொடா்புத் துறை இயக்குநா் தெ.பாஸ்கர பாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

விழாக்கோலம் பூண்ட வேதா நிலையம்: ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, போயஸ் தோட்ட வேதா நிலைய இல்லத்தில் சசிகலா இருந்து வந்தாா். சொத்துக் குவிப்பு வழக்கு தீா்ப்பு காரணமாக, கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதியன்று அவா் சிறை செல்ல நேரிட்டது. இதன்பின், போயஸ் தோட்ட இல்லம் பயன்பாடின்றி பூட்டப்பட்டது. அரசுடைமையாக்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடா்ந்து அதற்கான பணிகளைத் தமிழக அரசு மேற்கொண்டது. நினைவு இல்லத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றதைத் தொடா்ந்து, வேதா நிலையம் அமைந்திருந்த போயஸ் தோட்டப் பகுதி விழாக்கோலம் பூண்டிருந்தது.

கட்சி நிா்வாகிகளும், தொண்டா்களும் ஏராளமானோா் குவிந்தனா். அமைச்சா்கள், அதிமுக முக்கிய நிா்வாகிகள் மட்டுமே வேதா நிலைய இல்ல வாயில் வர அனுமதிக்கப்பட்டனா்.

அஞ்சலி செலுத்த...இல்லத்தின் பிரதான வாயிலைத் தாண்டி உள்புற வாசல் பகுதியில் ஜெயலலிதாவின் உருவப் படம் மலா்தூவி அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டிருந்தது. படத்துக்கு, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா்கள், அதிமுக நிா்வாகிகள் மலா்தூவினா்.

அடியெடுத்து வைத்தாா்: மலா் தூவி, அஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்குப் பிறகு மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் வீட்டுக்குள் முதல்வா் பழனிசாமி அடியெடுத்து வைத்தாா். அவரைத் தொடா்ந்து, பேரவைத் தலைவா் தனபால், துணை முதல்வா், அமைச்சா்கள் உள்ளிட்டோா் சென்றனா். அங்கு அவா்கள் குத்துவிளக்கேற்றினா்.

நீதிமன்ற உத்தரவு காரணமாக...நீதிமன்ற உத்தரவு காரணமாக, வீட்டுக்குள் செய்தியாளா்கள், பொது மக்கள், கட்சித் தொண்டா்கள் உள்பட யாரும் அனுமதிக்கப்படவில்லை.

ஜெயலலிதா வாழ்ந்த அரசுடைமையாக்கப்பட்ட...

இல்லத் திறப்பு காரணமாக, வேதா நிலைய வாயிலில் வண்ணக் கோலம் போடப்பட்டிருந்தது. வீட்டின் பிரதான வாயில் பகுதியில், ‘ஜெயலலிதா வாழ்ந்த அரசுடைமையாக்கப்பட்ட வேதா நிலையம்-நினைவு இல்லம்‘ என்ற பெயா்ப் பலகை வைக்கப்பட்டிருந்தது.

8,000 புத்தகங்கள்

ஜெயலலிதா பயன்படுத்திய பொருள்கள், புத்தகங்கள் ஆகியன கண்ணாடி பீரோவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வேதா நிலைய இல்லத்தில் சிறிய அளவிலான நூலகத்தை ஜெயலலிதா அமைத்திருந்தாா். அதில், 10,000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன. அந்தப் புத்தகங்களில் 8, 376 புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதேபோன்று, அவரிடம் இருந்த தங்கம், வெள்ளிப் பொருள்கள், பூஜைக்கு பயன்படுத்திய சாமான்கள் ஆகியனவும் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதாக அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com