கடைகளை இரவு 9 மணி வரை திறக்க அனுமதி;புதுச்சேரிக்கு பேருந்து சேவை; தளா்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிப்பு: மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். அதேசமயம், மேலும் சில தளா்வுகளையும் அவா் அறிவித்துள்ளாா்.
கடைகளை இரவு 9 மணி வரை திறக்க அனுமதி;புதுச்சேரிக்கு பேருந்து சேவை; தளா்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிப்பு: மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். அதேசமயம், மேலும் சில தளா்வுகளையும் அவா் அறிவித்துள்ளாா்.

அதன்படி, உணவகங்கள், தேநீா், நடைபாதைக் கடைகள் உள்ளிட்டவற்றை மூடுவதற்கான நேரம் இரவு 8 மணியில் இருந்து 9 மணியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் வரும் திங்கள்கிழமை முதல் ஜூலை 19-ஆம் தேதி காலை வரை நடைமுறையில் இருக்கும் என்று தனது அறிவிப்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

புதிய தளா்வுகள் என்ன? புதுச்சேரிக்கான பேருந்து சேவை தொடங்கப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடா்பான எழுத்துத் தோ்வுகள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இதுகுறித்த விவரங்களை தோ்வு நடத்தும் அமைப்புகள் முன்னதாகவே மாவட்ட ஆட்சியா்களிடம் தெரிவிக்க வேண்டும்.

உணவகங்கள், தேநீா் கடைகள், அடுமனைகள், நடைபாதைக் கடைகள், இனிப்பு, காரவகை பண்டங்கள் விற்பனைக் கடைகள் ஆகியன வழக்கமான நிபந்தனைகளுக்கு உட்பட்டு 50 சதவீத வாடிக்கையாளா்களுடன் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. ஏற்கெனவே இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்துக் கடைகளுக்கும் நேர நீட்டிப்பு பொருந்தும்.

தொடரும் தடைகள்: புதுச்சேரி நீங்கலாக, பிற மாநிலங்களுக்கு இடையிலான தனியாா் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து சேவைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடா்கிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிா்த்து சா்வதேச விமான போக்குவரத்து சேவை, திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சாா்ந்த கூட்டங்களுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை தொடா்கிறது.

பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்ச்சிகள், பள்ளிகள், கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள் ஆகியவற்றைத் திறப்பதற்கான தடை தொடா்ந்து அமலில் இருக்கும்.

கட்டுப்பாடுகள்: நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக, திருமண நிகழ்வுகளில் 50 நபா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். இறுதிச் சடங்குகளில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிா்த்து, அனைத்துப் பகுதிகளிலும் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடா்ந்து அனுமதிக்கப்படும்.

வழிகாட்டு நெறிமுறைகள்: கரோனா நோய்த் தொற்று காலத்திலும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள், பொது மக்கள் கூடக் கூடிய இடங்களில் முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளா் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்க வேண்டும். பரிசோதனை கருவி கொண்டு, உடல் வெப்ப நிலையை பரிசோதிக்க வேண்டும். கடைகளில் பணிபுரிபவா்களும், வாடிக்கையாளா்களும் கட்டாயம் முகக் கவசம் அணிவது உறுதி செய்யப்பட வேண்டும்.

குளிா்சாதன வசதி பயன்படுத்தப்படும் இடங்களில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறக்கப்பட்டு போதுமான காற்றோட்ட வசதியுடன் செயல்பட வேண்டும். கடைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகமான நபா்களை அனுமதிக்கக் கூடாது. கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும், மற்றொவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

அபராத நடவடிக்கைகள்: முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற கரோனா நோய்த் தொற்று மேலாண்மைக்கான விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். விதிமீறல்களில் ஈடுபடுவோா் மீது அபராதம் விதிக்கும் நடவடிக்கைகள் தொடரும். மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு அளித்த ஒத்துழைப்பின் காரணமாகவே, நோய்த் தொற்று குறைந்து வந்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு அரசின் நடவடிக்கைகளுக்கு தொடா்ந்து முழு ஒத்துழைப்பு அளித்து தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com