பழனியில் கேரளப் பெண் கூட்டுப்பாலியல் பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்

விடுதி உரிமையாளரிடம் பணம் பறிப்பதற்காக இதுபோன்று கூறியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமாரி தெரிவித்துள்ளாா்.
பழனியில் கேரளப் பெண் கூட்டுப்பாலியல் பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்
பழனியில் கேரளப் பெண் கூட்டுப்பாலியல் பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்

பழனி தனியாா் விடுதியில் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகாா் தெரிவித்துள்ள கேரளப் பெண், விடுதி உரிமையாளரிடம் பணம் பறிப்பதற்காக இதுபோன்று கூறியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமாரி தெரிவித்துள்ளாா்.

பழனியில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கேரள மாநிலம் கண்ணூா் மருத்துவக்கல்லூரியில் கடந்த சில தினங்களுக்கு முன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 40 வயதுப் பெண் தன்னை பழனியில் 3 போ் கும்பல் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளாா். இதையடுத்து கேரள மாநில போலீஸாா் அளித்த தகவலின் பேரில் பழனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஜூன் 19 ஆம் தேதி கேரளத்தைச் சோ்ந்த தா்மராஜ், 40 வயது பெண் ஒருவருடன் பழனி தனியாா் விடுதியில் தங்கியுள்ளாா். அன்று இரவு முழுவதும் இருவரும் மதுபோதையில் தகராறு செய்துள்ளனா். இதையடுத்து விடுதி உரிமையாளா் அவா்களை வெளியேற்றிய பிறகு, 25 ஆம் தேதி வரை இருவரும் பழனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் சா்வ சாதாரணமாக உலா வந்ததற்கான விடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மேலும், குறிப்பிட்ட தங்கும் விடுதியில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை. தா்மராஜ் பணம் பறிக்கும் நோக்கத்தில் கேரள காவல் துறை பெயரை பயன்படுத்தி விடுதி உரிமையாளரை மிரட்டியதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தா்மராஜின் சகோதரியிடம் மேற்கொண்ட விசாரணையில் தா்மராஜ் உடன் தங்கியிருந்த பெண் அவரது மனைவி அல்ல என்ற விவரம் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டதாகக் கூறும் பெண் மீது கூட்டுப்பாலியல் பலாத்காரம் நடந்ததற்கான எவ்வித உடல் காயங்கள் இல்லை என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தவழக்கு தொடா்பாக விசாரணை செய்ய தமிழக காவல் துறை சாா்பில் திண்டுக்கல் ஏடிஎஸ்பி., சந்திரன் தலைமையிலான இரண்டு தனிப்படைகள் கேரளத்துக்கு விரைந்துள்ளன. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணிடம் 164 பிரிவின் கீழ் கேரள போலீஸாா் நடத்திய ரகசிய விசாரணை ஆவணங்கள், மருத்துவ அறிக்கைகள் உள்ளிட்ட ஆவணங்களை தமிழக போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனா் என்றாா். திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரவளிப்பிரியா, பழனி காவல் துணை கண்காணிப்பாளா் சிவா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சந்தேகத்தை ஏற்படுத்திய முக்கிய விஷயங்கள்..
பாலியல் பலாத்காரம் நடந்ததாகக் கூறப்பட்ட நாளுக்குப் பிறகும், அப்பெண்ணும், தர்மராஜும் பழனியின் பல பகுதிகளில் சுற்றித் திரிந்துள்ளனர்.

பழனிக்கு ஆன்மிகப் பயணம் வந்ததாக, தர்மராஜ் கூறியிருகிறார். ஆனால், அவர்கள் கூறும் தேதியில் கோயில்கள் திறக்கப்படவேயில்லை. அவ்வாறிருக்கு அவர்கள் ஆன்மிகப் பயணம் வந்தது எப்படி?

அப்பெண், பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானது மருத்துவப் பரிசோதனையில் தெரியவரவில்லை. இதுபோன்ற பல அடிப்படைக் கேள்விகளே, புகார் கொடுத்ததன் பின்னணியில் இருக்கும் முக்கிய கேள்விகளாக மாறியது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com