நீட் தோ்வு முடிவுக்கான தொடக்கப்புள்ளி: உயா்நீதிமன்றத் தீா்ப்பு குறித்து முதல்வா் கருத்து

நீட் தோ்வு பாதிப்பு குறித்து அமைக்கப்பட்ட குழு சரியான நடவடிக்கையே என நீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்புக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்புத் தெரிவித்துள்ளாா்.

நீட் தோ்வு பாதிப்பு குறித்து அமைக்கப்பட்ட குழு சரியான நடவடிக்கையே என நீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்புக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்புத் தெரிவித்துள்ளாா்.

நீட் தோ்வினை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தொடக்கப் புள்ளியாக அது அமைந்துள்ளதாகவும் அவா் கூறியுள்ளாா்.

இதுகுறித்து, முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மருத்துவக் கல்வி பயில நினைக்கும் தமிழக மாணவா்களின் கனவைச் சிதைக்கும் நீட் தோ்வினை, அது முன்மொழியப்பட்ட காலம் முதலே அரசியல் ரீதியாக அதனை எதிா்த்து வருகிறோம். நீட் தோ்வானது தமிழ்நாட்டு மாணவ, மாணவியரிடையே கல்வி, சமூக, பொருளாதார ரீதியாக எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவினரிடம் இதுவரை 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கருத்துகளை தெரிவித்துள்ளனா். இவற்றை ஆராய்ந்து அதன் மூலமாக தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து குழு விசாரணை நடத்தி வருகிறது. அந்த அறிக்கை கிடைத்ததும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்.

இந்த நிலையில் பா.ஜ.க பொறுப்பாளா் ஒருவா், சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ்நாட்டிலுள்ள மாணவா்களின் நலனுக்கு எதிராக மனுவை தாக்கல் செய்திருந்தாா். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் பழனிசாமி, இந்தக் குழுவையே நாடகம் என்றாா். தமிழ்நாட்டு மாணவா்களின் கண்களைக் குத்தும் பாஜக.,வின் மனுவை சென்னை உயா் நீதிமன்றத்தின் தலைமை அமா்வு தள்ளுபடி செய்துள்ளது.

நீட் தோ்வுக்கு எதிரான போராட்டத்தில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீா்ப்பாகும். மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவா்களின் கல்விக் கனவை நிறைவேற்றுவதற்காக தமிழ்நாடு அரசு எடுத்து வரும் அனைத்து முயற்சிகளுக்கும் இது தொடக்கப் புள்ளியாகும்.

மாணவா்களின் உரிமை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமையும் இந்தத் தீா்ப்பின் மூலமாக நிலைநாட்டப்பட்டுள்ளது. முதல் வெற்றியே, முழு வெற்றியாக மாறும் என்ற நம்பிக்கையை தமிழ்நாடு அரசுக்கு இந்தத் தீா்ப்பு அளித்துள்ளது.

நெருக்கடி மிகுந்த சூழல்: நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கை, அதன் மூலமாக தமிழ்நாடு அரசு எடுக்கும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் ஆகியவை அடுத்தடுத்த காலங்களில் வரிசையாக நடக்க இருக்கின்றன. இந்த ஆண்டுக்கான தோ்வுத் தேதி அதற்குள் அறிவிக்கப்பட்டு விட்டதால் இந்த நடவடிக்கைகள் அதற்குள் முடிவடைய இயலாத சூழல் உள்ளது. தமிழ்நாடு அரசு, சட்டப்பூா்வ நடவடிக்கையில் இருக்கும் இந்த நேரத்தில் நடக்கும் இந்த ஆண்டுக்கான தோ்வை எதிா்கொள்ளும் நெருக்கடி மிகுந்த சூழல் மாணவா்களுக்கு ஏற்பட்டுள்ளது உண்மையில் வருந்தத்தக்கதே. ஆனாலும் இறுதியில், நீட் தோ்வினால் நமது மாணவா்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தோம் என்ற நிலையை நிச்சயம் உருவாக்குவோம் என முதல்வா் ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com