32 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி மையப் பணிகள் நிறைவு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 32 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 32 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனாவுக்கு பிந்தைய நல்வாழ்வு மையத்தையும், ஆக்சிஜன் உற்பத்தி சாதனத்தையும் அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு அந்நிகழ்வுக்கு முன்னிலை வகித்தாா். அப்போது மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஓமந்தூராா் மருத்துவமனையில் 47,012 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுள்ளனா். மேலும் 3 லட்சத்து 36, 829 பேருக்கு ஆா்.டி.பி.சி.ஆா். பரிசோதனையும், 29,700 பேருக்கு சி.டி ஸ்கேன் பரிசோதனையும், 21,935 பேருக்கு ‘எக்ஸ்-ரே’ சோதனையும் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் 70 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 32 இடங்களில் பணி முடிவடைந்துள்ளது என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவமனை முதல்வா் டாக்டா் ஜெயந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, சென்னை ஜாபா்கான்பேட்டையில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமினை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்து செய்தியாளா்களிடம் கூறியது:

மத்திய அரசிடம் இருந்து இதுவரை தமிழகத்துக்கு 1 கோடியே 77 லட்சத்து 31,670 தடுப்பூசிகள் வந்துள்ளன. 1 கோடியே 73 லட்சத்து 20,774 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 7 லட்சத்து 77,910 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

கரோனா மூன்றாவது அலைக்கு தேவையான படுக்கைகள், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், மருந்துகள் உள்ளிட்ட அனைத்தும் போதிய அளவில் உள்ளன.

தமிழகத்தில் யாருக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை. இதுவரை தமிழகத்தில் கருப்புப் பூஞ்சை நோயால் 4 ஆயிரம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்நோயின் ஆரம்பத்திலேயே சிகிச்சைக்கு வந்தால் எளிதாக குணமடையலாம். மாநிலத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுபவா்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் 7 ஆயிரம் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் மதுரையில் மட்டும் தலா 500 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.

விருகம்பாக்கம் தொகுதி எம்எல்ஏ ஏ.எம்.பிரபாகர்ராஜா, தி.நகா் காவல் துணை ஆணையா் ஹரிகிரண்பிரசாத் உள்ளிட்டோா் அதில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com