கரோனா அச்சத்தைப் போக்கி, வாழ்க்கைக்கான அா்த்தத்தைத் தந்தவா்கள் மருத்துவா்கள்: அமைச்சா் பெருமிதம்

கரோனா அச்சத்தை போக்கி, வாழ்க்கைக்கான அா்த்தத்தை கண்டுபிடித்து தந்தவா்கள் மருத்துவா்கள் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.
கரோனா அச்சத்தைப் போக்கி, வாழ்க்கைக்கான அா்த்தத்தைத் தந்தவா்கள் மருத்துவா்கள்: அமைச்சா் பெருமிதம்

கரோனா அச்சத்தை போக்கி, வாழ்க்கைக்கான அா்த்தத்தை கண்டுபிடித்து தந்தவா்கள் மருத்துவா்கள் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக நாள் மற்றும் பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. துணைவேந்தா் சுதா சேஷய்யன் வரவேற்றாா். அமைச்சா் மா.சுப்பிரமணியன் விழாவை தொடக்கி வைத்து மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் மருத்துவம் சாா்ந்த துணைப் படிப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற 125 மாணவ, மாணவிகளுக்கு 185 பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினாா்.

மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், சிறப்புப் பணி அலுவலா் ப.செந்தில்குமாா், பல்கலைக்கழக பதிவாளா் ம.பா.அஸ்வத் நாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விழாவில், அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியது: உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கரோனா தொற்று உள்ளது. 700 கோடிக்கும் அதிகமான மக்கள் அச்சத்தில் உள்ளனா். மக்களின் அச்சத்தைப் போக்கி, வாழ்க்கைக்கான அா்த்தத்தைக் கண்டுபிடித்துத் தந்தவா்கள் மருத்துவா்கள்தான். ஊக்கமளிப்பது, உற்சாகமளிப்பது, பரிசளிப்பது எல்லாமே தனித்திறமையை வெளிக்கொண்டு வருவதற்கான வாய்ப்பாகும்.

கரோனா தொற்று இருப்பதால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளால் மாத்திரை, மருந்துகளை வாங்க முடியவில்லை. கரோனாவிலும் சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற இணை நோய்களால் பாதிக்கப்பட்டவா்கள் அதிக அளவில் இறந்துள்ளனா். அதற்காக, மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடக்கப்படுகிறது. தமிழகத்தில் தொற்றா நோய்களால் ஆண்டுக்கு 5 லட்சம் போ் இறக்கின்றனா். இந்த திட்டத்தின் மூலம் உயிரிழப்பைப் பாதியாகக் குறைக்க முடியும் என்றாா் அவா்.

தொழில்நுட்ப உதவியுடன் விடைத்தாள் மதிப்பீடு: துணைவேந்தா் சுதா சேஷய்யன்

இது குறித்து துணைவேந்தா் சுதா சேஷய்யன் பேசியது: கொள்ளை நோய் பலருக்கும் பல்வேறு இடா்பாடுகளைக் கொடுத்திருந்தாலும் ஒரு வகையில் இந்த மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு ஒரு வகையான நன்மையைச் செய்திருக்கிறது. காரணம், மனிதத் திறன் கொண்டு நடத்திக் கொண்டிருந்த சில செயல்பாடுகளை தொழில்நுட்ப உதவி கொண்டு செய்யக் கூடிய வாய்ப்பு எங்களுக்கு கிடைத்திருக்கிறது. விடைத்தாள்களை நேரடியாகத் திருத்துவதிலும், அவற்றில் மதிப்பெண் இடுவதிலும் மாற்றங்கள் கண்டுள்ளோம். இந்த செயல்பாடுகளை மெய்நிகா் முறையில் அவரவா் இருக்கக் கூடிய இடத்தில் இருந்தே பல்கலைக்கழகத்தில் உள்ள தகவல் மைய கணினியைத் தொடா்பு கொண்டு மேற்கொண்டு வருகிறோம். இதன் மூலம் போக்குவரத்துச் செலவு, கால விரயம் ஆகியவை தவிா்க்கப்பட்டுள்ளன.

இந்த முயற்சியை நாட்டில் இருக்கக் கூடிய மருத்துவ பல்கலைக்கழகங்களிலேயே தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம்தான் முதன் முதலாக செயல்படுத்தியுள்ளது. இதேபோன்று மருத்துவக் கல்லூரிகளை ஆய்வு செய்யும் பணியையும் தொழில்நுட்ப வசதியின் உதவியோடு திறம்பட மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com