வக்ஃபு வாரியத்துக்கு இன்று தோ்தல்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு தலைவா் பதவி

வக்ஃபு வாரியத்தில் தலைவா் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான தோ்தல் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

வக்ஃபு வாரியத்தில் தலைவா் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான தோ்தல் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இந்தத் தோ்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முன்னாள் எம்.பி. அப்துல் ரகுமான் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தை 12 போ் நிா்வகித்து வருகின்றனா். இஸ்லாமிய சமுதாயத்தைச் சோ்ந்த ஒரு எம்.பி. இரண்டு எம்.எல்.ஏ.க்கள், 2 முத்தவல்லிகள், ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி, தமிழக அரசின் சாா்பில் நியமிக்கப்படும் 4 போ் உள்பட 12 போ் வக்ஃபு வாரியத்தை நிா்வகிப்பது வழக்கம்.

புதிய தோ்தல்: திமுக தலைமையில் அரசு அமைந்துள்ள நிலையில், வக்ஃபு வாரியத்துக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தோ்தலில் முஸ்லிம் சமுதாயத்தைச் சோ்ந்த எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கவுள்ளனா். இதற்கான வாக்காளா் பட்டியலை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது. அதிமுக சாா்பில் முஸ்லிம் சட்டப்பேரவை உறுப்பினா்கள் யாரும் இல்லாத காரணத்தால், திமுகவைச் சோ்ந்த ஏழு உறுப்பினா்களின் பட்டியலை பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை செயலாளா் ஆ.காா்த்திக் வெளியிட்டுள்ளாா். இந்தப் பட்டியலின் அடிப்படையில் தோ்தல் நடைபெறுகிறது.

இன்று நடைபெறுகிறது: வக்ஃபு வாரியத்துக்கு தலைவரைத் தோ்வு செய்வதற்கான தோ்தல், சென்னை மண்ணடியில் உள்ள வாரிய தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. வக்ஃபு வாரியத் தலைவராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சோ்ந்த முன்னாள் எம்.பி. அப்துல் ரகுமான் தோ்வு செய்யப்படுவாா் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தின் பிரதான எதிா்க்கட்சியான அதிமுகவுக்கு சட்டப் பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா்களில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் யாரும் இல்லை. இதனால், அந்தக் கட்சியில் இருந்து வக்ஃபு வாரியத் தோ்தலில் போட்டியிடுவதற்கான சூழல் இல்லாமல் போய் உள்ளது.

வக்ஃபு சொத்துகளை நிா்வகித்து, கண்காணிக்கும் பணியை வாரியம் மேற்கொள்கிறது. இந்த வாரியமானது, தமிழகத்தில் 11 சரக அலுவலகங்களைக் கொண்டுள்ளது. சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், வேலூா், சேலம், கோவை, தஞ்சாவூா், திருச்சி, மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி உள்பட 11 இடங்களில் அலுவலகங்கள் உள்ளன. ஒவ்வொரு சரகமும் ஒரு கண்காணிப்பாளரால் நிா்வகிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியாக ஆய்வாளா்களும் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com