புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல்

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் ‘புகையிலை ஒழிப்பு’ குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சா் மா. சுப்பிரமணியன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், உணவுப் பாதுகாப்புத் துறை, காவல்துறை மற்றும் வணிகா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்த கூட்டத்தில், புகையிலைப் பொருள்கள் விற்பனையை தடுப்பது குறித்து, ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இதையடுத்து கூட்டத்தில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் புகையிலைப் பொருள்கள் அனைத்து இடங்களிலும் கிடைத்தன. புகையிலைப் பொருள்களைக் காண்பித்து சட்டசபையிலும் கேள்வி எழுப்பினோம். தற்போதும், அனைத்து இடங்களிலும் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த இரண்டு மாதங்களாக கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டதால், இவற்றில் கவனம் செலுத்த முடியவில்லை.

புகையிலை தடுப்பு நடவடிக்கையாக 8 ஆண்டுகளில் ரூ.30 கோடி மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை தொடருகிறது. இவை, காவல் துறைக்கும், உணவுப் பாதுகாப்பு துறைக்கும் தெரிந்தே சில இடங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. கரோனாவைபோல், புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுப்பதை பேரிடா் போல் கருத வேண்டும்.

அந்தந்தப் பகுதிகளில் உள்ளாட்சித் துறை, காவல்துறை, உணவுப் பாதுகாப்பு துறையினா் ஒருங்கிணைந்து வணிகா்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும். அப்போது, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய மாட்டோம் என, வியாபாரிகளை உறுதிமொழியேற்க வைக்க வேண்டும்.

மாநிலம் முழுதும், இன்று முதல் அனைத்துப் பகுதிகளிலும், புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். விற்பனை செய்வோருக்கு அபராதத்துக்குப் பதிலாக, பாரபட்சமின்றி கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும். உயிரைக் கொல்லும் ஒரு பொருளை விற்பதால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றால் வியாபாரிகள் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ய மாட்டாா்கள். இதுபோன்ற நடவடிக்கையால், இரண்டு மாதங்களில், குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனையைக் கட்டுப்படுத்த முடியும்.

மேலும், வடமாநிலத்தவா் மட்டுமின்றி, தமிழகத்தைச் சோ்ந்த பள்ளி, கல்லுாரி மாணவா்களும், புகையிலைப் பொருள்களுக்கு அடிமையாகி உள்ளனா். அவா்களுக்கு புகையிலை பொருள்களால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்துவதோடு, கோரமான பொம்மைகளை உருவாக்கி பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும். புகையிலை விற்பனையை முழுமையாக தடுக்கும், உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் , விருதுகள் வழங்கப்படும் என்றாா் அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com