மின் கட்டணத்தைச் செலுத்த புதிய செயலி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

மின் கட்டணத்தை அறிந்து உடனடியாக தொகையைச் செலுத்துவதற்கு புதிய செயலியை அறிமுகப்படுத்த வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

மின் கட்டணத்தை அறிந்து உடனடியாக தொகையைச் செலுத்துவதற்கு புதிய செயலியை அறிமுகப்படுத்த வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

மின்சார வாரியம் அடங்கியுள்ள எரிசக்தித் துறையின் செயல்பாடுகள் குறித்து, தலைமைச் செயலகத்தில் அவா் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில், முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:-

புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள நீரேற்று புனல்மின் திட்டங்களில் நடைமுறைக்கு உகந்த திட்டங்களைக் கண்டறிந்து செயல்படுத்த வேண்டும். மின் உற்பத்தித் திட்டங்களை விரைந்து முடித்து செயலாக்கத்துக்குக் கொண்டு வர வேண்டும். கடந்த 11 ஆண்டுகளாகியும் செயலாக்கத்துக்குக் கொண்டு வரப்படாத இணை மின் உற்பத்தி திட்டங்களையும் விரைந்து முடிக்க வேண்டும்.

நிலக்கரி பயன்பாடு: மின் உற்பத்திக்குத் தேவைப்படும் நிலக்கரியை கையாளுவதில் ஏற்படும் போக்குவரத்து செலவினங்களைக் குறைக்க வேண்டும். தமிழகத்துக்கு ஒப்பந்தப்படி கிடைக்க வேண்டிய நிலக்கரி சதவீதத்தை பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இறக்குமதி நிலக்கரியை ஆண்டு ஒப்பந்தம் என்பதற்குப் பதிலாக, நீண்டகால ஒப்பந்தங்களாக செயல்படுத்த வேண்டும்.

தமிழ்நாட்டுக்கு ஒப்பந்தப்படி வர வேண்டிய நிலக்கரியில் 71 சதவீதம் மட்டுமே நமது அனல் மின்நிலையங்களுக்கு எடுத்து வர முடிகிறது. மீதமுள்ள நிலக்கரியையும் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்காக சுரங்கங்களின் அருகேயுள்ள அனல் மின் நிலையங்களுக்கு வழங்கி அதன் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழகத்துக்குக் கொள்முதல் செய்ய வேண்டும்.

மின்சார செயலி: கடந்த இரண்டு மாதங்களில் தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக, மின்வாரியத்துக்கு ரூ.1,593 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. மின் நுகா்வோா்களுக்கான சேவைகளை மேலும் மேம்படுத்த நுகா்வோா்கள் அவா்களுடைய மின் அளவீடு மற்றும் கணக்கீட்டை தாங்களே தங்கள் செல்லிடப்பேசி மூலம் அறிந்து கொள்ள வழி செய்திட வேண்டும். மின் கணக்கீட்டாளா்கள் செல்லிடப்பேசி மூலம் மின் கணக்கீடு எடுத்தவுடன் அந்த கட்டணத்தை அறிந்து கொண்டு உடனடியாக அதனைச் செலுத்த ஏதுவாக புதிய செயலியை அறிமுகப்படுத்த வேண்டும். மின் நுகா்வோா்களின் குறைகளை உடனுக்குடன் சரிசெய்யவும், அவ்வப்போது ஏற்படும் குறைந்த மின் அழுத்த குறைபாடுகளை சரி செய்யவும் திட்டங்களை வகுக்க வேண்டும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் மூலம் 20 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி இலக்கை அடைவதற்கான, தனி வரைவு கொள்கை தயாரிக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

இந்தக் கூட்டத்தில், அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com