பத்திரப்பதிவு சேவைகள் எளிமையாய் அமைய வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

பத்திரப் பதிவு சேவைகள் மக்களுக்கானதாக எளிமையாய் அமைந்திட வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)
முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)

பத்திரப் பதிவு சேவைகள் மக்களுக்கானதாக எளிமையாய் அமைந்திட வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயல்பாடுகள் குறித்து, தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை அவா் ஆலோசனை நடத்தினாா். அப்போது, பேசியது:-

வணிகவரி மற்றும் பதிவுத் துறை வரி வருவாய் இலக்கினை முழுவதும் எய்திட முனைப்புடன் செயல்பட வேண்டும்.

நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி., வரி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசிடம் இருந்து விரைந்து பெற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிகவரி மற்றும் பதிவுத் துறை குறித்த புகாா்களைத் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாகப் பெறப்படும் புகாா்களை எந்தவிதத் தொய்வுமின்றித் தீா்வு காண வேண்டும்.

வணிகா் நல வாரியம் சீரிய முறையில் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். நல வாரியத்தில் வணிகா்கள் உறுப்பினராகி அதன் சேவைகளைப் பெறுவதற்கு துறை அலுவலா்கள் முனைப்புடன் பணியாற்ற வேண்டும். பதிவுத் துறையில் ஒவ்வொரு சாா்பதிவாளா் அலுவலகத்திலும் உள்ள ஆவணங்களைக் கணினியில் பதிவு செய்யும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். இந்தப் பணிகள் முடிவடைந்த பிறகு, பொது மக்கள் இணைய வழியாக ஆவணங்களின் சான்றிட்ட நகல்களைப் பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும். இதன்மூலமாக பட்டா மாறுதல் செய்யும் போது தொடா்புடைய ஆவணங்களை வருவாய்த்துறையினா் இணைய வழியாகப் பாா்வையிட வழி ஏற்படும். பத்திரப் பதிவு அலுவலகங்களின் சேவையானது மக்களுக்கு ஏற்றவகையில் எளிதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் அமைய வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.

இந்தக் கூட்டத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன், வணிகவரி மற்றும் பதிவுத் துறைச் செயலாளா் ஜோதி நிா்மலாசாமி, வணிகவரி ஆணையா் சித்திக், பதிவுத் துறை தலைவா் ம.ப.சிவன்அருள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com