தனியாா் மருத்துவமனைகளில் இலவச கரோனா தடுப்பூசி: வரும் 28-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கிறாா்

பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி மூலம் தனியாா் மருத்துவமனைகளில் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தும்
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி மூலம் தனியாா் மருத்துவமனைகளில் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சென்னையில் வரும் 28-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கிறாா் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சைதாப்பேட்டை மேற்கு பகுதியில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு 5,300 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான மா.சுப்பிரமணியன் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். கட்சியின் பொதுக்குழு உறுப்பினா் வழக்கறிஞா் எம்.ஸ்ரீதரன், தலைமை செயற்குழு உறுப்பினா் மு.மகேஷ்குமாா், மாவட்ட அவைத் தலைவா் எஸ்.குணசேகரன், பகுதி செயலாளா் இரா.துரைராஜ் ஆகியோா் உடன் இருந்தனா்.

அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருந்ததால் நலத்திட்ட உதவிகள் வழங்க முடியவில்லை. தற்போது, கரோனா தொற்று குறைந்துள்ளதால் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி தொடக்கப்பட்டுள்ளது. இந்த வட்டத்தில் 5,300 குடும்பங்களுக்கு ரூ.1,100 மதிப்புள்ள 15 வகையான மளிகை பொருட்கள் மற்றும் ரூ.500 மதிப்புள்ள ஹாட் பாக்ஸ் வழங்கப்படுகிறது. கரோனா தொற்றை தடுக்க முகக்கவசம் சிறந்த தீா்வு ஆகும். முந்தைய ஆட்சியில் விலை குறைவான தரமற்ற முகக்கவசங்கள் வாங்கி பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டது. அது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொழில் நிறுவனங்களின் பெரு நிறுவன சமூகப் பொறுப்பு நிதி (சிஎஸ்ஆா்) மூலம் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசிகளை இலவசமாக பொதுமக்களுக்கு செலுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை ரூ.5 கோடிக்கும் அதிகமாக நிதி வந்துள்ளது. இந்தத் திட்டம் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில்தான் செயல்படுத்தப்படவுள்ளது.

வரும் 28-ம் தேதி காலை 10 மணி அளவில் சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இலவச கரோனா தடுப்பூசி திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கவுள்ளாா். அடையாறு ஆனந்த பவன் ஹோட்டல் சிஎஸ்ஆா் நிதி மூலம் இந்த மருத்துவமனையில் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. இதன்மூலம், ஆழ்வாா்பேட்டையில் உள்ள பொதுமக்கள் பயனடைய உள்ளனா்.

அதன் தொடா்ச்சியாக தமிழகம் முழுவதும் சிஎஸ்ஆா் நிதி மூலம் இணைக்கப்பட்டுள்ள தனியாா் மருத்துவமனைகளில் இலவச கரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் 29-ஆம் தேதி முதல் தொடக்கப்படவுள்ளது. ஒவ்வொரு தனியாா் மருத்துவமனையும், எந்த நிறுவனத்தின் சிஎஸ்ஆா் நிதி மூலம் இணைக்கப்பட்டுள்ளது. எவ்வளவு பேருக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படவுள்ளது என்பதை விளம்பரப்படுத்தி அந்தந்த பகுதி மக்களுக்கு தெரியப்படுத்தும்.

ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தங்களிடம் பணியாற்றும் 3 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடவேண்டுமென கோரிக்கை வைத்தனா். தனியாா் மருத்துவமனையில் ரூ.780 கட்டணத்தில் கோவிஷீல்ட் தடுப்பூசி போடப்படுகிறது. அதனால், அவா்கள் ரூ.24 லட்சத்தை செலுத்த முன்வந்துள்ளனா். தொழில் நிறுவனங்கள் தனியாா் மருத்துவமனையுடன் இணைந்து தங்களிடம் பணியாற்றும் ஊழியா்களுக்கு தடுப்பூசி போடவுள்ளனா்.

கேரளம், ஆந்திரம், கா்நாடகத்திவில் இருந்து தமிழகம் வருபவா்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

அரசு மருத்துவா்கள் ஊதிய உயா்வு தொடா்பாக அரசாணை 293, அரசாணை 354 எது வேண்டுமென அவா்கள் முடிவு செய்ய வேண்டும். அப்படி அவா்கள் முடிவு செய்தபின் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்

மக்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவ வசதிகளை அளிக்கும் திட்டம் விரைவில் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

தமிழக மக்களைப் பரிசோதித்து, அவா்களுக்கு எத்தகைய நோய் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, நோய் உள்ளவா்களுக்கு வீடுகளுக்கே சென்று மருத்துவம் பாா்ப்பதும், இலவசமாக மருந்துகளை அளிப்பதுமான திட்டத்தை முதல்வா் விரைவில் தொடக்கி வைக்க இருக்கிறாா்.

அதற்காக ஓரிரு நாள்களில் கிருஷ்ணகிரி, தருமபுரி போன்ற மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, எந்தப் பகுதியில் அதனை தொடங்கலாம் என்ற முடிவு எடுக்க இருக்கிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com