மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தற்காலிக இடம் தேர்வு செய்தால் நிகழாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறும்: மத்திய அரசு தகவல்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தற்காலிக இடத்தை தேர்வு செய்தால், நிகழாண்டிலேயே எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தற்காலிக இடம் தேர்வு செய்தால் நிகழாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறும்: மத்திய அரசு தகவல்


மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தற்காலிக இடத்தை தேர்வு செய்தால், நிகழாண்டிலேயே எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மதுரை அருகே தோப்பூரில் சுமார் 201.75 ஏக்கர் நிலத்தில் ரூ.1,264 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 
கடந்த 2019 ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடி  மதுரைக்கு வந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிச் சென்றார். 
தமிழகத்தோடு சேர்ந்து அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் பிறமாநிலங்களில் கட்டுமானப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. ஆனால் மதுரையில் மட்டும் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.
இதனிடையே, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிரந்தர கட்டடம் கட்டும் வரை தற்காலிக இடத்தில் தொடங்கவும், எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை மற்றும் வெளிநோயாளிகள் பிரிவைத் தொடங்கவும் உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. 
இந்த வழக்கு வரும் ஜூலை 30- ஆம் தேதி விசாரணைக்கு வரும் நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை தொடர்பாக மத்திய சுகாதாரத்துறைச் செயலர் ராஜேஷ் பூஷன், தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். 
அதில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தற்காலிக இடத்தை தேர்வு செய்தால் நிகழாண்டிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும். செலவினம், அலுவலர் தேர்வு, உள்கட்டமைப்பு ஆகியவற்றை மத்திய சுகாதாரத்துறை ஏற்றுக்கொள்ளும். நிகழாண்டில் மாணவர் சேர்க்கைக்கு தேவையான வசதி, வகுப்பறை, அலுவலகத்துக்கான இடத்தை தேர்வு செய்ய வேண்டும். தற்காலிக இடத்தை தமிழக அரசு தேர்வு செய்தால், மதுரை எய்ம்ஸில்  எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை நடைபெறும். இதில் 50 முதல் 100 மாணவர்கள் வரை சேர்க்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com