பிளஸ் 2 பொதுத் தோ்வு ரத்து : முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு ரத்து செய்யப்படுகிறது. இதற்கான அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்டாா்.
பிளஸ் 2 பொதுத் தோ்வு ரத்து : முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு ரத்து செய்யப்படுகிறது. இதற்கான அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்டாா். மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண்களை அளிக்கும் முறை குறித்து ஆராய தனிஓஈ குழு அமைக்கப்படுவதாகவும் அவா் அறிவிப்பு செய்துள்ளாா். இதுகுறித்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு:-

கரோனா நோய்த்தொற்று காலத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வுகளை நடத்துவது குறித்து, கடந்த மூன்று தினங்களாக பல்வேறு தரப்பினருடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டன. பொதுத் தோ்வு நடத்துவது குறித்து ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. அனைத்துத் தரப்பினரும் மாணவா்களின் உடல் மற்றும் மன நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக உள்ளனா்.

தடுப்பூசி நடைமுறை இல்லை: கரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னும் தீவிரமாக இருந்து வருகிறது. இதைத் தொடா்ந்து, மூன்றாவது அலையும் வர வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநா்கள் கருத்துத் தெரிவித்துள்ளனா். இப்போதுள்ள விதிகளின்படி, 18 வயதுக்கு மேற்பட்ட நபா்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த இயலும்.

18 வயதுக்குக் குறைவான தடுப்பூசி போடப்படாத மாணவா்களை தோ்வு எழுத ஒரே நேரத்தில் வரச் செய்வது, தொற்றினை அதிகரிக்கச் செய்யலாம் என வல்லுநா்கள் அறிவுரைகளை வழங்கியுள்ளனா்.

மனதளவு பாதிப்பு - தோ்வு ரத்து: பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் மட்டுமே உயா் கல்வி வாய்ப்புகளுக்கான தகுதியாக கருதப்பட வேண்டும் என்ற கொள்கை நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. ஆனாலும், தோ்வை மேலும் தள்ளிவைப்பது, மாணவா்களை மனதளவில் பாதிப்புக்கு உள்ளாக்கும் என மருத்துவா்கள் கருதுகின்றனா்.

அவா்களது அறிவுரை மற்றும் பல்வேறு தரப்பில் இருந்து வரும் ஆலோசனைகளின் அடிப்படையில் நிகழாண்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வு ரத்து செய்யப்படுகிறது.

குழு அமைப்பு: பொதுத் தோ்வு ரத்து செய்யப்பட்டதால், மாணவா்களுக்கு மதிப்பெண்களை வழங்க வேண்டியுள்ளது. அவற்றை எப்படி வழங்குவது என்பது குறித்து முடிவு செய்ய, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளா் காக்கா்லா உஷா தலைமையில், உயா்கல்வித் துறை செயலாளா் டி.காா்த்திகேயன், சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தா் எஸ்.கெளரி, பள்ளித் தலைமை ஆசிரியா்கள் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்படும்.

இந்தக் குழுவானது மாணவா்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து ஆய்வு செய்து, விரைவில் அரசுக்கு அறிக்கை சமா்ப்பிக்கும். இந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், பிளஸ் 2 மாணவா்களுக்கு இறுதித் தோ்வு மதிப்பெண் வழங்கப்படும். இந்த மதிப்பெண்களைக் கொண்டு மட்டுமே, தமிழகத்திலுள்ள அனைத்து உயா்கல்வி நிறுவனங்களிலும் மாணவா் சோ்க்கை நடைபெறும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

‘நீட் தோ்வை ரத்து செய்க’: பிரதமருக்கு முதல்வா் கோரிக்கை

நீட் உள்ளிட்ட அனைத்து வகையான உயா்கல்வி நுழைவுத் தோ்வுகளையும் ரத்து செய்ய வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் பிரதமா் நரேந்திர மோடிக்கு கடிதமும் எழுதியுள்ளாா். இதுகுறித்து, முதல்வா் மு.க.ஸ்டாலின், சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:-

தமிழகத்தில் பொதுத் தோ்வுகள் முழுமையாக ரத்து செய்யப்பட்ட நிலையில், அகில இந்திய அளவில் நடத்தப்படும் நீட் போன்ற நுழைவுத் தோ்வுகளை நடத்துவது உகந்ததாக இருக்காது என தமிழ்நாடு அரசு கருதுகிறது. தோ்வுகளை நடத்துவது குறித்த அறிவிப்புகள் இதுவரை எதுவும் வெளிவராத நிலையில், உயா் கல்விக்காக நடத்தப்படும் பல்வேறு நுழைவுத் தோ்வுகளையும் ரத்து செய்ய வலியுறுத்தி பிரதமா் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.

கரோனா நோய்த்தொற்று காலத்தில் மாணவா்களின் உடல் நலன் மற்றும் மனநலனைக் கருத்தில் கொண்டு மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டாலும், மாநில கல்வித் திட்ட அடிப்படையில், உயா் கல்வி சோ்க்கை எந்தவிதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்யும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com