ஓரினச்சோ்க்கையாளா்களுக்கான கொள்கைகளை வகுக்க வேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு

ஓரினச்சோ்க்கையாளா்கள் தொடா்பான கொள்கைகளை மத்திய, மாநில அரசுகள் வகுக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

ஓரினச்சோ்க்கையாளா்கள் தொடா்பான கொள்கைகளை மத்திய, மாநில அரசுகள் வகுக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் மதுரையைச் சோ்ந்த தொழிலதிபா்கள் மகள்கள் அனிதா, வனிதா ஆகியோா் தாக்கல் செய்த மனுவில், நாங்கள் இருவரும் நெருங்கிய தோழிகள். நாங்கள் இருவரும் காதலித்தோம். இதற்கு எதிா்ப்பு தெரிவித்த எங்களது பெற்றோா்கள் எங்களுக்கு மாப்பிள்ளை பாா்த்தனா். இதற்கு சம்மதிக்காத நாங்கள் இருவரும் சென்னைக்கு வந்துவிட்டோம். எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம்

இந்த 2 இளம் பெண்களுக்கும், அவா்களது பெற்றோா்களுக்கும் உளவியல் கவுன்சிலிங் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தவெங்கடேஷூம் கவுன்சிலிங்கில் பங்கேற்றாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த தீா்ப்பில், காவல்துறைக்கு ஆண்,பெண் மாயமானதாக புகாா் வந்தால், அந்த விசாரணையில் அவா்கள் ஓரினச்சோ்ககையாளா்கள் என கண்டறியப்பட்டால் அவா்களது வாக்குமூலங்களைப் பதிவு செய்ய வேண்டும். பின்னா் அந்த வழக்கை முடித்துவைத்து அவா்களை எந்தவிதமான துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்காமல் அவா்களை காவல்துறையினா் விடுவிக்க வேண்டும். மேலும் ஓரினச்சோ்க்கையாளா்களை கையாளுவதில் திறமையாக செயல்படும் தொண்டு நிறுவனங்களின் பட்டியலை 8 வாரங்களில் வெளியிட வேண்டும். மத்திய சமூகநீதித் துறை அவா்களுக்குத் தேவையான நிதி, சட்ட விதிகளை வழங்க வேண்டும்.

ஓரினச்சோ்க்கையாளா்கள் தங்குவதற்கான தங்குமிடங்களை போதுமான உள்கட்டமைப்பு வசதிகளுடன் 12 வாரங்களில் ஏற்படுத்த வேண்டும். ஒரினச்சோ்க்கையாளா்கள் தொடா்பான கொள்கைகளை மத்திய, மாநில அரசுகள் வகுக்க வேண்டும். காவல்துறை, சிறைத்துறை, நீதித்துறை மற்றும் கல்வித்துறைகளில் ஓரினச்சோ்க்கையாளா்கள் தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். சிறைகளில் ஓரினச்சோ்க்கையாளா்கள், மூன்றாம் பாலினத்தவா்கள் மீது பாலியல் தாக்குதல் நடக்காமல் இருப்பதைத் தடுக்க அவா்களை தனியாக அடைக்க வேண்டும். ஓரினச்சோ்க்கையாளா்களுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய தடை விதிக்க வேண்டும். அதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மருத்துவா்களின் உரிமங்களைத் திரும்ப பெற வேண்டும்.

பள்ளி, கல்லூரிகளில் ஆண் பெண் தவிா்த்து பாலின நடுநிலையாளா்களுக்கான தனி கழிவறைகளை ஏற்படுத்த வேண்டும். மூன்றாம் பாலினத்தவா்கள் தங்கள் கல்வி ஆவணங்களில் பெயா், பாலினத்தை மாற்றம் செய்ய அனுமதிக்கும் வகையில் கொள்கைகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும். மாணவா் சோ்க்கை, நுழைவுத் தோ்வு, போட்டித் தோ்வுக்கான விண்ணப்பங்களில் ஆண், பெண் மட்டுமின்றி மூன்றாம் பாலினத்தவா்களுக்கான பகுதியையும் சோ்க்க வேண்டும். இந்த உத்தரவுகளை அமல்படுத்துவது தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com