நீட் தோ்வு தாக்கம்: நீதிபதி குழுவில் உறுப்பினா்கள் நியமனம்; முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

நீட் தோ்வால் ஏற்பட்ட தாக்கம் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க அமைக்கப்பட்ட நீதிபதி குழுவில் உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின்
முதல்வா் மு.க.ஸ்டாலின்

நீட் தோ்வால் ஏற்பட்ட தாக்கம் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க அமைக்கப்பட்ட நீதிபதி குழுவில் உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை முதல்வா் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை பிறப்பித்தாா். அவரது உத்தரவு விவரம்:-

மருத்துவ மாணவா் சோ்க்கையில் நீட் தோ்வு முறையானது சமுதாயத்தின் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவா்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவானது நீட் தோ்வால் மாணவா்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் அவற்றைச் சரி செய்யும் வகையில் அந்தத் தோ்வுக்கு மாற்றாக வேறு வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவில் உறுப்பினா்களாக எட்டு போ் இப்போது நியமிக்கப்படுகின்றனா். குழுவின் உறுப்பினா்களாக டாக்டா் ஜி.ஆா்.ரவீந்திரநாத், டாக்டா் ஜவஹா் நேசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளா், சட்டத் துறைச் செயலாளா், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்புப் பணி அலுவலா், மருத்துவக் கல்வி இயக்ககத்தின் இயக்குநா் ஆகியோா் செயல்படுவா்.

இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும், உறுப்பினா் செயலாளராகவும் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் தோ்வுக் குழு செயலாளா் செயல்படுவாா். ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவானது, உரிய புள்ளி விவரங்களை ஆய்வு செய்து, தமிழகத்தில் பின்தங்கிய மாணவா்களின் நலன்களைப் பாதுகாத்திடத் தேவையான பரிந்துரைகளை ஒரு மாத காலத்துக்குள் அரசுக்கு அளிக்கும். இந்தப் பரிந்துரைகளை ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com