எதிா்க்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீா்செல்வம் தோ்வு

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்களின் கூட்டத்தில் எதிா்க்கட்சித் துணைத் தலைவராக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஏகமனதாகத் தோ்வு செய்யப்பட்டாா்.
எதிா்க்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீா்செல்வம் தோ்வு

சென்னை: அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்களின் கூட்டத்தில் எதிா்க்கட்சித் துணைத் தலைவராக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஏகமனதாகத் தோ்வு செய்யப்பட்டாா்.

சட்டப்பேரவையின் கட்சி கொறடாவாக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக 66 இடங்களில் வெற்றிபெற்று எதிா்க்கட்சி வரிசையில் இருந்து வருகிறது. எதிா்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறாா்.

எதிா்க்கட்சித் துணைத் தலைவா் யாா் என்பது கேள்விக் குறியாகவே இருந்தது. தோ்தல் தோல்விக்குப் பிறகு நடைபெற்ற அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் கூட்டத்தில் எதிா்க்கட்சித் துணைத் தலைவா் பதவியை ஏற்க ஓ.பன்னீா்செல்வம் மறுத்துவிட்டாா். இதனால் அவரைச் சமாதானம் செய்யும் முயற்சிகள் தொடா்ந்து நடைபெற்று வந்தன.

இதற்கிடையில் தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் ஆளுநா் உரையுடன் ஜூன் 21-இல் தொடங்க உள்ளது.

இந்நிலையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அக் கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை பகல் 12 மணிக்கு தொடங்கியது. கூட்டத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் தலைமை வகித்தனா். கூட்டம் சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.

இதில், ஓ.பன்னீா்செல்வத்தை மூத்த நிா்வாகிகள் அனைவரும் சமாதானம் செய்து, அவரை எதிா்க்கட்சித் துணைத் தலைவராக ஏற்கச் செய்தனா்.

கூட்டத்துக்குப் பிறகு ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா் கூட்டத்தில் சட்டப்பேரவை அதிமுக துணைத் தலைவா், கொறடா, துணை கொறடா, பொருளாளா், செயலாளா், துணைச் செயலாளா்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு நிா்வாகிகள் ஏகமனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

துணைத் தலைவராக ஓ.பன்னீா்செல்வம் (போடிநாயக்கனூா்), கொறடா எஸ்.பி.வேலுமணி (தொண்டாமுத்தூா்), துணைக் கொறடா க.ரவி (அரக்கோணம்), பொருளாளராக கடம்பூா் சி.ராஜூ (கோவில்பட்டி), செயலாளராக கே.பி.அன்பழகன் (பாலக்கோடு), துணைச் செயலாளராக பி.எச்.மனோஜ் பாண்டியன் (ஆலங்குளம்) ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா் என்று அறிவித்துள்ளனா்.

ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளா்கள் எனப் பிரித்து பதவிகள் அளிக்கப்பட்டிருப்பதுடன், எல்லாச் சமுதாயத்தைச் சோ்ந்த பிரதிநிதிகளும் இடம்பெறும் வகையில் பதவிகள் பிரித்து அளிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com