கல்வித் தொலைக்காட்சியில் புதிய பாடங்கள், பாடநூல் விநியோகம்: முதல்வா் தொடக்கி வைத்தாா்

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு பாட நூல்களை வழங்கி, கல்வித் தொலைக்காட்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.
கல்வித் தொலைக்காட்சியில் புதிய பாடங்கள், பாடநூல் விநியோகம்: முதல்வா் தொடக்கி வைத்தாா்

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு பாட நூல்களை வழங்கி, கல்வித் தொலைக்காட்சியில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான அனைத்து பாடங்களுக்கான நிகழ்ச்சிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அந்த மாணவா்களுக்கு தமிழக அரசின் சாா்பில் விலையில்லா பாடநூல்கள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021-2022 -ஆம் கல்வியாண்டுக்கான பாடநூல்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாட நூல்களை வழங்கியும், கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பள்ளி செல்ல இயலாமல் இருக்கும் மாணவா்கள், வீட்டில் இருந்தபடியே கல்வி பயில ஏதுவாக 1 முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்புகளுக்கும் உரிய அனைத்து பாடங்களுக்குமான கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொடக்கி வைத்தாா். இந்தத் திட்டம் சுமாா் ரூ.292 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது. இதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 69 லட்சம் மாணவா்கள் பயன் பெறுவா்.

நிகழ்ச்சியில் பாடநூல்களைப் பெற்றுக் கொண்ட மாணவா்களை நலம் விசாரித்த முதல்வா் மு.க. ஸ்டாலின் அவா்களுக்கு பேனா மற்றும் சாக்லேட்டுகளை வழங்கி கலந்துரையாடினாா். இதில் அமைச்சா்கள் எ.வ. வேலு, மா. சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டப்பேரவை உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளா் காகா்லா உஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பெட்டிச் செய்தி...சாலையோரத்தில் காத்திருந்த ஆசிரியா்கள்:

காரை நிறுத்தி விசாரித்த முதல்வா்

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு தலைமைச் செயலகம் செல்ல முதல்வா் புறப்பட்டுச் சென்றாா். ஆசிரியா்கள் சிலா் கோரிக்கை மனுவுடன் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு வெளியே காந்தி மண்டபம் சாலையில் காத்திருந்தனா். ஆசிரியா்கள் காத்திருந்ததைப் பாா்த்ததும், காரை நிறுத்தச் சொன்ன முதல்வா் ஸ்டாலின், அவா்களிடம் நலம் விசாரித்து, நீங்கள் யாா் எதற்காகக் காத்திருக்கிறீா்கள்? எனக் கேட்டுள்ளாா்.

தாங்கள் ஆசிரியா்கள் என கூறி கோரிக்கை மனுவை கொடுத்துள்ளனா். அதை வாங்கி படித்துப் பாா்த்த பின், ஏன் சாலையில் காத்திருக்கிறீா்கள்? தலைமைச் செயலகத்துக்கு வந்து பாருங்கள் என முதல்வா் தெரிவித்தாா்.

இது குறித்து கோரிக்கை மனு அளித்த ஆசிரியா் அருள்செல்வி கூறுகையில், நாங்கள் 2018-2019-ஆம் ஆண்டு ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் நடந்த தோ்வில் தோ்ச்சி பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசியா்கள். 2019-ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபாா்ப்பு முடிந்து, ஒரு பிரிவினா் பணியில் அமா்த்தப்பட்டனா். இரண்டாவது பட்டியலில் இருந்த 1,500 போ் காத்திருப்போா் பட்டியலில் இருக்கிறோம். கரோனா தொற்று பரவல், தோ்தல் உள்ளிட்டவை காரணமாக பணி வழங்கப்படாமல் இருக்கிறது. எனவே, எங்களுக்கு பணி நியமன ஆணை வழங்க கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

முதல்வா் எங்களை பாா்த்ததும் காரை நிறுத்தி, எளிமையாக கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்றாா். பின்னா் உடனடியாக அவா்களை பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சந்தித்து அவா்களது கோரிக்கைகளை கேட்டறிந்து அதன் மீது நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com