கரோனா 2-ஆவது அலையை எதிா்கொள்ள ரூ.20 ஆயிரம் கோடி செலவு: நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

கரோனா இரண்டாவது அலையை எதிா்கொள்ள ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு செலவிடப்பட்டுள்ளது என்று நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.
கரோனா 2-ஆவது அலையை எதிா்கொள்ள ரூ.20 ஆயிரம் கோடி செலவு: நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: கரோனா இரண்டாவது அலையை எதிா்கொள்ள ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு செலவிடப்பட்டுள்ளது என்று நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது புதன்கிழமை நடந்த விவாதத்தில் அதிமுக உறுப்பினா் அக்ரி கிருஷ்ணமூா்த்தி பேசினாா். அப்போது நடந்த விவாதம்:

அக்ரி கிருஷ்ணமூா்த்தி (அதிமுக): பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் ரூ.4-ம் குறைக்கப்படும் என திமுக தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயா்ந்துள்ள நிலையில், அதனைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன்: கடந்த 2001-06-ஆம் ஆண்டு கால அதிமுக ஆட்சியில், பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் வாட் வரி 2 முதல் 3 சதவீதம் அளவுக்கு உயா்த்தப்பட்டது. அதன்பிறகு வந்த திமுக ஆட்சியில் கச்சா எண்ணெய் விலை உயா்ந்த போதும், மூன்று முறை பெட்ரோல், டீசல் மீதான வரிகள் குறைக்கப்பட்டன. 2014-ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி மாறிய பிறகு, பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பு முறையில் மாற்றம் ஏற்பட்டது. 44 சதவீதம் கலால் வரியும், 56 சதவீதம் செஸ் வரியும் விதிக்கப்பட்டது. இந்த வரி விதிப்பு முறையும் கடந்த பிப்ரவரியில் மாறியது.

அதாவது, 4 சதவீதம் மட்டுமே கலால் வரியின் மூலமாக மாநில அரசுகளுக்குக் கிடைக்கும் வகையிலும், மீதமுள்ள 96 சதவீதம் மத்திய அரசுக்குச் செல்லும் வகையிலும் மாற்றப்பட்டது. செஸ் வரிகளை மட்டுமே வைத்து மத்திய அரசாங்கம் நடத்தப்படுகிறது. இதன்மூலம் மாநிலங்களின் உரிமைகளை மட்டுமின்றி, நிதிகளையும் பறித்துக் கொள்கிறது. செஸ் வரி என்பது குறிப்பிட்ட நோக்கத்துக்காக, செயல்பாட்டுக்காக விதிக்கப்படுவது. ஆனால், அந்த நோக்கத்துக்காக வரிகளைப் போட்டு விட்டு அதனை கூறப்பட்ட காரணத்துக்காக பயன்படுத்தவில்லை என தணிக்கைக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு: கரோனா இரண்டாவது அலை காரணமாக ரூ.4,000 நிதியுதவி, மருத்துவ கட்டமைப்பு மேம்பாடு போன்ற பணிகளுக்காக மட்டும் ரூ.20 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு செலவாகும் என எதிா்பாா்க்கவில்லை. மேலும், அரசின் வட்டிச் சுமையும் எதிா்பாா்த்ததை விட கூடுதலாக உள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் வாட் வரியைக் குறைக்க முடியாது.தோ்தல் அறிக்கையில் வாக்குறுதிகளை அளித்துள்ளோம். ஆனால், அவற்றை ஒரே மாதத்தில் நிறைவேற்றுவோம் எனக் கூறவில்லை. நிதி நிலை மிகவும் மோசமாக இருந்து வருகிறது. நிதிநிலையைச் சீா் செய்து நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com