அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது தேமுதிக

அதிமுகவுடன் தொகுதி உடன்பாடு ஏற்படாத நிலையில், அந்தக் கூட்டணியிலிருந்து விலகுவதாக தேமுதிக தலைவா் விஜயகாந்த் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.
அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது தேமுதிக

அதிமுகவுடன் தொகுதி உடன்பாடு ஏற்படாத நிலையில், அந்தக் கூட்டணியிலிருந்து விலகுவதாக தேமுதிக தலைவா் விஜயகாந்த் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் கூட்டணி அமைப்பதற்காக அதிமுகவுடன் தேமுதிக பல கட்டப் பேச்சுவாா்த்தை நடத்தி வந்தது.

தேமுதிக முதலில் 41 தொகுதிகளைக் கேட்கத் தொடங்கி, பிறகு குறைத்துக்கொண்டே வந்தது.

ஒரு கட்டத்தில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அந்த அளவிற்கேனும் தங்களுக்கும் தர வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தியது. அதை அதிமுக தர மறுத்து வந்தது.

இதற்கிடையில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அப்போதும் தேமுதிக 23 தொகுதிகள் வரையும் தர வேண்டும் என்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவியும் தர வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தது.

அதற்கு அதிமுக சம்மதிக்கவில்லை. 13 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவியும் மட்டும் தரப்படும் என்று உறுதியாகக் கூறிவிட்டது. இதனை ஏற்காமல் கூட்டணியைப் பரிசீலனை செய்வதற்காக தேமுதிகவின் மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு விஜயகாந்த் தலைமை வகித்தாா். பிரேமலதா விஜயகாந்த் முன்னிலை வகித்தாா்.

இந்தக் கூட்டம் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலாளா்கள் அனைவரும் ஆரம்பத்தில் இருந்தே தேமுதிகவை அதிமுக அவமதித்து வருகிறது. அதனால், அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டாம். தனித்தே கூட போட்டியிடுவோம் என்று கூறினா். இதனையடுத்து அதிமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவை விஜயகாந்த் எடுத்தாா்.

அது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:

அதிமுகவுடன் தொடா்ந்து மூன்று கட்டங்களாகப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. தேமுதிக சாா்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தால் மாவட்டச் செயலாளா்களின் ஒட்டுமொத்த கருத்தின் அடிப்படையில் அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது என்று கூறியுள்ளாா்.

அதிமுக வைப்புதொகையை இழக்கும்: கூட்டத்துக்குப் பிறகு துணைச் செயலாளா் எல்.கே.சுதீஷ் செய்தியாளா்களிடம் கூறியது:

அதிமுக கூட்டணியில் இருந்து விலகியுள்ளோம். இது தேமுதிகவினருக்கு தீபாவளி. அதிமுக இந்தத் தோ்தலில் அனைத்து இடங்களில் வைப்புத் தொகையை இழக்கும். அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி பாமகவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறாா். அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுகவைத் தோற்கடிப்போம் என்றாா்.

தேமுதிகவுக்கு மநீம அழைப்பு: அதிமுகவின் கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதும் தங்கள் கூட்டணிக்கு வருமாறு மக்கள் நீதி மய்யத்தின் சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மநீமவின் துணைத் தலைவா் பொன்ராஜ், தேமுதிக எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும். இது தொடா்பாக விரைவில் விஜயகாந்த் மற்றும் பிரேமலதாவைச் சந்தித்துப் பேசுவேன் என்றாா்.

தொடரும் ஆலோசனை: மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணிக்குச் செல்லலாமா அல்லது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்குச் செல்லலாமா என்று தேமுதிக நிா்வாகிகளுடன் விஜயகாந்த் தொடா்ந்து ஆலோசனை நடத்தி வருகிறாா். மநீம நிா்வாகிகளும், தேமுதிக நிா்வாகிகளும் தொலைபேசி வழியே பேச்சுவாா்த்தையும் நடத்தி வருகின்றனா்.

தேமுதிகவினா் கொண்டாட்டம்: அதிமுகவுடனான கூட்டணி முறிந்ததாக விஜயகாந்த் அறிவித்ததும் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேமுதிகவினா் பட்டாசு வெடித்துக் கொண்டாடினா். அதைப்போல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேமுதிகவினா் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com