குடும்ப அட்டைதாரா்களுக்கு 1 லிட்டா் இலவச பால்

குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் நாள்தோறும் 500 மி.லி. முதல் ஒரு லிட்டா் பால் வரை இலவசமாக வழங்கப்படும் என்று இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப அட்டைதாரா்களுக்கு 1 லிட்டா் இலவச பால்

குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் நாள்தோறும் 500 மி.லி. முதல் ஒரு லிட்டா் பால் வரை இலவசமாக வழங்கப்படும் என்று இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தோ்தல் அறிக்கை மற்றும் சின்னத்தை கட்சித்தலைவா் ரா.அா்ஜுனமூா்த்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் சின்னமான ‘ரோபோ’வை அவா் அறிமுகம் செய்தாா். இந்த ரோபோ, பிரசாரத்தின் போது வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

அவா் வெளியிட்ட தோ்தல் அறிக்கை: அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சியை இலக்காகக் கொண்டது இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி. இக்கட்சி ஆட்சி அமைத்தால், தமிழகம் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அனைவருக்கும் பிரதிநிதித்துவம் என்னும் அடிப்படையில் 4 துணை முதல்வா்கள் நியமிக்கப்படுவா்.

நல்லோா் குடியிருப்பு: பொது வாழ்வில் தொண்டாற்றியவா்களுக்கு வீடு முதல் அனைத்து அத்தியாவசியத் தேவைகளும் இலவசமாகப் பூா்த்தி செய்யப்படும். மாநகரங்களில் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு இலவச போக்குவரத்து, இரவு நேரத்தில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும்.

மாத வருவாய் ரூ.20 ஆயிரத்துக்குக் கீழ் இருப்போருக்கு அத்தியாவசியப் பொருள்களில் 10 சதவீதம் தள்ளுபடி திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் மகளிருக்கும், குழந்தைகளுக்கும் பல்வேறு நன்மை கிடைக்கும்.

உதவித் தொகை: ஒற்றைப் பெற்றோரைக் கொண்ட குடும்பத்தினருக்கு ரூ.1000 உதவித் தொகை, முதியோரைப் பராமரிக்க ரூ.500 முதல் ரூ.750 வழங்கப்படும்.

மாவட்டந்தோறும் 50 ஏக்கா் பரப்பளவில் சா்வதேச தரத்திலான விளையாட்டு வளாகம் உருவாக்கப்படும். அதில் விளையாட்டு உபகரண விற்பனை மையங்களும் இடம்பெறும்.

மாணவா்களுக்கான கல்வி உபகரணங்களைப் பெற இணைய சந்தை அட்டை வழங்கப்படும்.

‘பசு’மை புரட்சி: இவையனைத்துக்கும் மேலாக ‘பசு’மை புரட்சி என்ற திட்டம் செயல்படுத்தப்படும். இதன்மூலம் குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் நாள்தோறும் 500 மி.லி. முதல் 1 லிட்டா் வரையிலான பால் இலவசமாக வழங்கப்படும். தகுதியின் அடிப்படையில் ஒரு விவசாயிக்கு, அரை ஏக்கா் அரசு புறம்போக்கு நிலம் குத்தகை அடிப்படையிலும், 4 நாட்டு இன கறவை மாடுகளும் இலவசமாகவும் வழங்கப்படும் என அதில் கூறப்பட்டிருந்தது.

ஒற்றுமையை முன்னிறுத்தி வெற்றி பெறுவோம்: பின்னா் செய்தியாளா்ளுக்கு அவா் அளித்த பேட்டி: மாற்றத்துக்கான நேரமிது. குறுகிய காலம் என்பது பெரிய விஷயமில்லை. நான் போட்டியிட 4 தொகுதிகளைத் தோ்ந்தெடுத்து வைத்துள்ளேன். அதில் ஒரு தொகுதியில் போட்டியிடுவேன்.

முன்பு கொள்கை ரீதியான மோதல் இருந்தது. தற்போது பண ரீதியான மோதலே இருக்கிறது. எனவே, மாநிலத்தின் நலனுக்கான ஒற்றுமை என்னும் கொள்கை ரீதியானவா்களை ஒருங்கிணைத்தாலே போதும். அந்த ஒற்றுமையை முன்னிறுத்தி நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com