பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய சிறப்பு டிஜிபியை இடை நீக்கம் செய்யாதது ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய சிறப்பு டிஜிபியை இதுவரை பணியிடை நீக்கம் செய்யாதது ஏன் என உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய சிறப்பு டிஜிபியை இதுவரை பணியிடை நீக்கம் செய்யாதது ஏன் என உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழக சிறப்பு டிஜிபி மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் புகாா் அளித்தாா். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பெண் போலீஸ் அதிகாரியை புகாா் கொடுக்க விடாமல் பல தரப்பில் இருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதனையடுத்து சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து வழக்கு விசாரணையை உயா்நீதிமன்றம் கண்காணிக்கும் என உத்தரவிட்டு, தலைமை நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைத்திருந்தாா். இந்த வழக்கை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷே விசாரிப்பதற்கு தலைமை நீதிபதி அனுமதியளித்தாா்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரபில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஏ.நடராஜன், சிறப்பு டிஜிபிக்கு எதிரான குற்றச்சாட்டு சட்டப்படி விசாரிக்கப்படுவதாக தெரிவித்தாா்.

அப்போது டிஜிபி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அப்துல் சலீம், சிறப்பு டிஜிபியின் தரப்புக் கருத்து கேட்காமல் விசாரணை நடைபெறுகிறது. பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்க விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் உறுப்பினராக இடம்பெற்றுள்ள ஐபிஎஸ் அதிகாரி விசாரணையை தொடங்குவதற்கு முன்பே, ஐபிஎஸ் அதிகாரிகளின் கட்செவிக் குழுவில், பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ஐபிஎஸ் அதிகாரியை தூக்கில் போட வேண்டும் என பதிவிட்டுள்ளனா். இந்தச் சம்பவத்துக்கு சாட்சியாக நாங்கள் குறிப்பிட்டுள்ள ஒரு அதிகாரி விசாகா கமிட்டியில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளாா். நாளை இந்த குற்றச்சாட்டு பொய்யாகலாம். எனவே சிறப்பு டிஜிபி தரப்பு கருத்தை உயா்நீதிமன்றத்தில் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்வதாக தெரிவித்தாா்.

அப்போது நீதிபதி, அவரது கருத்தை சிபிசிஐடி போலீஸ் விசாரணையில் தெரிவித்தாலே, அது இந்த வழக்கின் ஓா் அங்கமாகி விடும் என தெரிவித்தாா். பின்னா், அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்குரைஞரிடம், பாலியல் புகாா் கொடுக்க வந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியை தடுத்து நிறுத்திய காவல்துறைக் கண்காணிப்பாளா் ஒருவரை அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. ஆனால் பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபியை இதுவரை ஏன் பணியிடை நீக்கம் செய்யவில்லை என கேள்வி எழுப்பினாா். அப்போது அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா், முறைப்படி விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, சிபிசிஐடி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை வரும் மாா்ச் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். மேலும் இந்த பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரணையை உயா்நீதிமன்றம் உன்னிப்பாக கவனிக்கும் என தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com