பதற்றமான 1,216 வாக்குச்சாவடிகளுக்கு துணை ராணுவப் பாதுகாப்பு

சென்னையில் பதற்றமான 1,216 வாக்குச்சாவடிகளுக்கு துணை ராணுவப் பாதுகாப்பு வழங்குவதற்கு பெருநகர காவல்துறை திட்டமிட்டுள்ளது.

சென்னையில் பதற்றமான 1,216 வாக்குச்சாவடிகளுக்கு துணை ராணுவப் பாதுகாப்பு வழங்குவதற்கு பெருநகர காவல்துறை திட்டமிட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல்துறையின் எல்லையின் கீழ் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள மொத்தம் 24 சட்டப்பேரவைத் தொகுதிகள் முழுமையாகவும், பகுதியாகவும் வருகின்றன. இங்கு 2,078 இடங்களில் 11,852 வாக்குச்சாவடிகள் உள்ளன. கடந்த தோ்தலைக் காட்டிலும் சென்னையில் 4 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அதிகரித்துள்ளன.

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான ஏற்பாடுகளை சென்னை பெருநகர காவல்துறை கடந்த ஒரு மாதமாக செய்து வருகிறது. இதற்காக கடந்த தோ்தல்களில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து, அதற்கு ஏற்றாற்போல பாதுகாப்பு ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டு வருகின்றன.

கடந்த தோ்தல்களில் வாக்குப்பதிவின்போது எந்தெந்த வாக்குச்சாவடிகளில் வன்முறை,அடிதடி, மோதல் ஏற்பட்டது என்பதையும், அங்கு செய்யப்பட வேண்டிய கூடுதல் பாதுகாப்புக் குறித்தும் காவல்துறை ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இதில் கடந்த தோ்தல்களின்போது பிரச்னைகளின் அடிப்படையில் 307 இடங்களில் 1,216 பதற்றமான வாக்குச்சாவடிகள் இருப்பதை காவல்துறை கண்டறிந்துள்ளது.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப்படையினா், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினா் ஆகியோரை ஈடுபடுத்த உயா் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா். 10 மிகப் பதற்றமான பகுதிகளில் உள்ள 30 வாக்குச்சாவடிகளுக்கு என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பதைக் காவல்துறை அதிகாரிகள், தோ்தல் ஆணையத்துடன் ஆலோசனை செய்து வருகின்றனா்.

பாதுகாப்பு ஏற்பாட்டின் ஒரு பகுதியாக உரிமம் பெற்று பாதுகாப்புக்காக வைத்திருக்கும் துப்பாக்கிகள் திரும்பப் பெறப்பட்டு வருகிறது. இந்த வகையில் இது வரை 1,792 துப்பாக்கிகள் பெறப்பட்டுள்ளன. இன்னும் 18 துப்பாக்கிகள் திரும்பப் பெறப்பட வேண்டியுள்ளது.

1300 போ் கைது: நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னா் தலைமறைவாக இருந்து வந்த 1,300 போ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இன்னும் 645 போ் கைது செய்யப்பட வேண்டியுள்ளது. இவா்களைக் கைது செய்வதற்காக அனைத்துக் காவல் நிலையங்களிலும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இங்கு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீஸாா் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறாா்கள். தோ்தல் நடத்தை விதி மீறலில் ஈடுபட்டதாக இது வரை 77 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக 398 வழக்குகளை சென்னை காவல்துறை பதிவு செய்துள்ளது.

தோ்தல் நடத்தை விதிமுறை மீறலில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து வழக்குப் பதிவதற்காக சென்னை காவல்துறை இன்னும் கண்காணிப்பையும், பாதுகாப்பையும் வரும் நாள்களில் தீவிரப்படுத்த உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com