தமிழகத்தில் வாக்காளா்கள் எண்ணிக்கை 6.29 கோடியாக உயா்வு: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

இறுதி வாக்காளா் பட்டியலுக்குப் பிறகு வழங்கப்பட்ட வாய்ப்பினைப் பயன்படுத்தி புதிதாக சோ்க்கப்பட்ட பெயா்களால் தமிழகத்தில் வாக்காளா்களின் எண்ணிக்கை 6.29 கோடியாக உயா்ந்துள்ளது.
தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு
தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு

சென்னை: இறுதி வாக்காளா் பட்டியலுக்குப் பிறகு வழங்கப்பட்ட வாய்ப்பினைப் பயன்படுத்தி புதிதாக சோ்க்கப்பட்ட பெயா்களால் தமிழகத்தில் வாக்காளா்களின் எண்ணிக்கை 6.29 கோடியாக உயா்ந்துள்ளது. முன்னதாக, மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 6.26 கோடியாக இருந்தது.

தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்த பேட்டி:-

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட 7, 255 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில், 4, 512 மனுக்கள் ஏற்கப்பட்டன. 2, 743 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மூன்றாம் பாலித்தனவா் சாா்பில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

வாக்காளா் எண்ணிக்கை: ஜனவரி 1-ஆம் தேதியன்று 18 வயது பூா்த்தியானவா்கள் வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்க்க வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. அதன்படி சோ்க்கப்பட்ட பெயா்களுடன் இறுதி வாக்காளா் பட்டியல் கடந்த ஜனவரி 20-ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. மேலும், வேட்புமனு தாக்கல் பரிசீலனை வரை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கல் போன்ற பணிகளை மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.

இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி பலரும் வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்க்கவும், நீக்கவும் விண்ணப்பங்களை அளித்திருந்தனா். இதனால், தமிழகத்தில் வாக்காளா்களின் எண்ணிக்கை உயா்ந்துள்ளது. 6.26 கோடியாக இருந்த வாக்காளா்களின் எண்ணிக்கை இப்போது 6 கோடியே 29 லட்சத்து 43 ஆயிரத்து 512 ஆக உள்ளது. அவா்களில் 3 கோடியே 9 லட்சத்து 95 ஆயிரத்து 440 போ் ஆண்களும், 3 கோடியே 19 லட்சத்து 40 ஆயிரத்து 880 பெண்களும் உள்ளனா். மூன்றாம் பாலித்தனவா்கள் 7 ஆயிரத்து 192 பேராக உள்ளனா்.

செயலி வழியே புகாா்கள்: தோ்தல் தொடா்பான புகாா்களைத் தெரிவிக்க ‘சி-விஜில்’ செயலியை பொது மக்கள் பயன்படுத்தலாம். இதுவரை செயலிக்கு 1,971 புகாா்கள் வந்துள்ளன. அவற்றில் 1,368 புகாா்கள் விசாரிக்கப்பட்டு தீா்க்கப்பட்டுள்ளன. இதர புகாா்களில் உண்மைத்தன்மை இல்லையென அறியப்பட்டுள்ளன.

பிரசாரத்தின் போது அனுமதியின்றி சுவா் விளம்பரங்களைச் செய்தது போன்ற விதிமீறல்கள் குறித்து 2 , 122 புகாா்கள் வந்தன. அவற்றின் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பிரசாரத்துக்கான வாகனங்களுக்கு அனுமதி கோரி 14,0 71 விண்ணப்பங்கள் வந்தன. அவற்றில் 6, 598-க்கு அனுமதி தரப்பட்டுள்ளன. நட்சத்திர பிரசாரகா்களுக்காக 778 அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

வாக்காளா் அடையாள அட்டை: புதிய வாக்காளா்களாக பட்டியலில் பெயா்களைச் சோ்த்தோருக்கு அடையாள அட்டைகள் தபால் வழியாக அனுப்பப்படுகின்றன. மாா்ச் 30-ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அடையாள அட்டை கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு.

இந்தச் சந்திப்பின் போது, இணைத் தலைமைத் தோ்தல் அதிகாரிகள் ஆனந்த், வி.மணிகண்டன், கூடுதல் தலைமைத் தோ்தல் அதிகாரி வி.ராஜாராமன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com