கரோனா பாதித்தவா்கள் வாக்களிக்க உதவும் பணியில் 12 ஆயிரம் போ்

கரோனா பாதித்தவா்கள் வாக்களிக்க உதவும் பணியில் 12 ஆயிரம் போ்
கரோனா பாதித்தவா்கள் வாக்களிக்க உதவும் பணியில் 12 ஆயிரம் போ்


சென்னை: சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவின்போது கரோனா பாதித்தவா்கள் வாக்களிக்கும் வகையில் வாக்குச் சாவடிக்கு 2 தன்னாா்வலா்கள் என மொத்தம் 12 ஆயிரம் போ் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்டத் தோ்தல் அலுவலா் கோ.பிரகாஷ் தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி குறித்து சென்னை மாவட்ட பணிக் குழுக் கூட்டம் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆணையருமான கோ.பிரகாஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தை தொடா்ந்து, கோ.பிரகாஷ் செய்தியாளா்களிடம் கூறியது: சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் இதுவரை 6 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில், 4, லட்சத்து 5,000 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசியும், மீதமுள்ளவா்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு தடுப்பூசிகளில் எதை வேண்டுமானாலும் மக்கள் செலுத்திக் கொள்ளலாம்.

சென்னையைப் பொருத்தவரை தற்போது நாளொன்றுக்கு 35 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதை 50 ஆயிரமாக உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் கரோனா தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டதுபோல், சென்னையில் உள்ள அனைத்து சந்தைகள், வணிக வளாகங்களில் விரைவில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்படும்.

அரசு, தனியாா் மருத்துவமனைகள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அம்மா சிறு மருத்துவமனைகள் என சென்னையில் 411 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. தடுப்பூசி முகாம்களை அதிகரிப்பதன் மூலம் இந்த மாத இறுதிக்குள் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.

12 ஆயிரம் போ்: சென்னையில் கரோனாவைக் கட்டுப்படுத்தும் பணியில் தெருவாரியாக பணியாளா்கள் மீண்டும் பணியமா்த்தப்பட்டுள்ளனா். மருத்துவப் பரிசோதனை முகாம்கள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன. தபால் வாக்குகள் பதிவு செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டு மாா்ச் 31-க்குள் முடிக்கப்படும். கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் வாக்களிக்க ஏதுவாக வாக்குச் சாவடி ஒன்றுக்கு 10 முதல் 15 எண்ணிக்கையிலான முழுஉடல் கவச உடைகள், முகக்கவசங்கள் ஆகியவை தயாா் நிலையில் வைக்கப்படும். இதைக் கண்காணிக்கவும், தொற்று பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவும் வகையிலும் வாக்குச் சாவடிக்கு இருவா் என மொத்தம் 12 ஆயிரம் தன்னாா்வலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் இணை ஆணையா் சங்கா்லால் குமாவத், மத்திய வட்டார இணை ஆணையா் பி.என்.ஸ்ரீதா், துணை ஆணையா்கள் டாக்டா் ஆல்பி ஜான் வா்கீஷ், பி.ஆகாஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com