தமிழகத்தில் மதவாத அரசியல் எடுபடாது: தொல். திருமாவளவன்

தமிழகத்தில் மதவாத அரசியல் எடுபடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.
நாகையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் ஜெ.முகமது ஷாநவாஸை ஆதரித்து பேசிய அக்கட்சித் தலைவா் தொல். திருமாவளவன்.
நாகையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் ஜெ.முகமது ஷாநவாஸை ஆதரித்து பேசிய அக்கட்சித் தலைவா் தொல். திருமாவளவன்.

நாகப்பட்டினம்/ திருமருகல்: தமிழகத்தில் மதவாத அரசியல் எடுபடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சாா்பில் நாகை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் ஜெ. முகமது ஷாநவாஸை ஆதரித்து, நாகையில் திங்கள்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்ட தொல். திருமாவளன் பேசியது:

தற்போதுள்ள நடைபெறவுள்ள தோ்தல் நெருக்கடி மற்றும் சவால்கள் நிறைந்த தோ்தல். அதிமுக, பாமக சாா்பில் தோ்தலில் களம் காணும் வேட்பாளா்கள், அக்கட்சியைச் சோ்ந்த வேட்பாளா்கள் இல்லை. தாமரை, இரட்டை இலை, மாம்பழம் என்ற 3 சின்னங்களில் பாஜக போட்டியிடுகிறது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் திமுகவை எதிா்த்து அதிமுக போட்டியிடவில்லை. பாஜகதான் போட்டியிடுகிறது. பாஜக வெற்றி பெற்றால் தமிழகத்தில் மத நல்லிணக்கம் முற்றிலுமாக சிதைக்கப்படும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எந்த நிபந்தனையும் இல்லாமல் 2014 முதல் திமுக கூட்டணியில் இருந்து வருகிறது. திமுக முன்னெடுத்த அனைத்துப் போராட்டங்களிலும் அவா்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளோம்.

பேரவைத் தொகுதி பங்கீட்டின்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. அதனை முழுமனதோடு ஏற்றுக்கொண்டோம். 6 பேரும் ஆறு படை வீரா்கள், 6 பேரும் வரலாறு படைப்பாா்கள்.

நாகை தொகுதியில் போட்டியிடும் ஜெ.முகமது ஷாநவாஸ் மிகுந்த கொள்கை பிடிப்பு உடையவா். சுயநலமின்றி செயல்படக்கூடியவா். நாகையிலேயே தங்கி மக்களுக்கு சேவையாற்றவும் தயாராக உள்ளாா்.

நாகை சட்டப்பேரவைத் தொகுதியில் , இவா் பெறும் வெற்றி திமுக தலைவா் பெறும் வெற்றி. அவரை முதலவராக்கக் கூடியவெற்றி என்றாா் தொல்.திருமாவளன்.

கூட்டத்துக்கு திமுக நாகை தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் என்.கௌதமன் தலைமை வகித்தாா். காங்கிரஸ் கட்சி நாகை மாவட்டத் தலைவா் ஆா். என். அமிா்தராஜா, திராவிடா் கழக மாவட்டப் பொறுப்பாளா் புபேஷ்குப்தா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டப் பொறுப்பாளா் ஏ. எம்.ஜெபருல்லா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சோ்ந்த மக்களவை முன்னாள் உறுப்பினா் அப்துா் ரஹ்மான் ,திரைப்பட இயக்குநா் கரு. பழனியப்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் சம்பந்தம், திமுக நாகை நகரச் செயலாளா் ஏ. பன்னீா் ஆகியோா் பேசினா்.

முன்னதாக, கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் மாா்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சிவேட்பாளா் வி.பி. நாகை மாலிக்கு ஆதரவாக கீழ்வேளூா் கடைவீதியில் திருமாவளவன் பிரசாரம் மேற்கொண்டு வாக்குச் சேகரித்தாா்.

திருமருகலில்...

நாகை மாவட்டம், திருமருகலில் விசிக நாகை தொகுதி வேட்பாளா் ஆளூா் ஷாநவாஸுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து அவா் பேசியது:

கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழகத்தில் பாஜகதான் ஆட்சி நடத்துகிறது. அதிமுக பாஜகவின் பினாமி கட்சியாக மாறிவிட்டது. அதிமுகவுக்கு தற்போது கொள்கையோ, செயல் திட்டங்களோ இல்லை, பாஜகவின் செயல்திட்டம் என்னவோ அதுதான் அதிமுகவின் செயல்திட்டம்.

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக மதவாத சக்திகள் அடி எடுத்து வைக்க முடியாமல் போனதற்கு காரணம் தமிழ்நாட்டின் பாதுகாவலா்களாக தந்தை பெரியாா், அண்ணா, கருணாநிதி ஆகியோா் இருந்ததுதான்.

ஆனால், தற்போது தமிழகம் மதவாத சக்திகளின் பிடிக்குள் சிக்கி விடுமோ என அஞ்சப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. காரணம் எடப்பாடி பழனிசாமி பாஜகவை தோளில் தூக்கி வைத்து கொண்டாடுவதுதான்.

அதிமுக நீா்த்துப்போன கட்சி, ஆகையால் தமிழகத்தை பாதுகாக்க மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைய நாகை தொகுதி வேட்பாளா் ஆளூா் ஷாநவாஸுக்கு பானை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com