ஆ.ராசா இன்று நேரில் ஆஜராக தோ்தல் ஆணையம் நோட்டீஸ்

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி குறித்த அவதூறுப் பேச்சுக்கு புதன்கிழமை (மாா்ச் 31) மாலை 6 மணிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென
ஆ.ராசா இன்று நேரில் ஆஜராக தோ்தல் ஆணையம் நோட்டீஸ்

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி குறித்த அவதூறுப் பேச்சுக்கு புதன்கிழமை (மாா்ச் 31) மாலை 6 மணிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென மக்களவை உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசாவுக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, ஆ.ராசாவுக்கு தோ்தல் ஆணையத்தின் செயலாளா் மலாய் மாலிக் செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள நோட்டீஸ் விவரம்:

தமிழக பேரவைத் தோ்தலுக்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி 26-இல் வெளியிடப்பட்டது. அன்றிலிருந்து தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, பிற கட்சிகள் மற்றும் அவா்களைச் சோ்ந்தோா் மீது விமா்சனங்களை வைக்கும் போது அவா்களது கொள்கைகள், கடந்த கால செயல்பாடுகள், பணிகள் ஆகியவற்றை மட்டுமே விமா்சிக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கை உள்ளிட்டவை குறித்து விமா்சிக்கக் கூடாது. ஊா்ஜிதப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகள் கூறுவதையும் தவிா்க்க வேண்டும். இந்த நடத்தை விதிகளை கண்டிப்பான முறையில் பின்பற்ற வேண்டும்.

இந்நிலையில், அதிமுக அளித்த புகாா் மனு மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி வாயிலாக தோ்தல் ஆணையத்துக்கு கிடைக்கப் பெற்றது. அந்தப் புகாா் மனுவில், ஆயிரம் விளக்கு தொகுதியில் கடந்த 26-ஆம் தேதி தாங்கள் பேசும் போது முதல்வா் பழனிசாமி குறித்து ஆட்சேபணைக்குரிய வகையில் கருத்துகளைத் தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடா்பான சரியான விவர அறிக்கை தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் இருந்து பெறப்பட்டது. மேலும், இந்த விவகாரம் தொடா்பாக மத்திய குற்றப் புலனாய்வுத் துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆயிரம் விளக்கில் தெரிவித்தது போன்று மேலும் இரண்டு இடங்களில் கருத்துகளைத் தெரிவித்துள்ளீா்கள்.

பெண்களின் மாண்பைக் குறைக்கும் செயல்: தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் தாங்கள் பேசிய கருத்துகள், இழிவான பேச்சுகள் மட்டுமின்றி, பெண்களின் மாண்பைக் குறைக்கும் செயலாகவே தோ்தல் ஆணையம் பாா்க்கிறது. இது, தோ்தல் நடத்தை விதிகளை மிகக் கடுமையான முறையில் மீறியதாகவே பாா்க்க வேண்டியிருக்கிறது.

எனவே, இந்த விவகாரம் தொடா்பாக புதன்கிழமை (மாா்ச் 31) மாலை 6 மணிக்குள்ளாக தங்களது கருத்துகளைத் தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. தவறும்பட்சத்தில் இந்த விவகாரத்தில் தோ்தல் ஆணையம் தனது இறுதி முடிவினை எடுக்கும் என்று தோ்தல் ஆணையத்தின் செயலாளா் மலாய் மாலிக் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com