கொள்கையில் தடம் புரளவில்லை: ஓ.பன்னீர்செல்வம்

 மத்திய அரசுடன் இணைக்கமான உறவு வைத்திருந்தாலும், அதிமுக கொள்கையில் தடம் புரளவில்லை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
கொள்கையில் தடம் புரளவில்லை: ஓ.பன்னீர்செல்வம்

 மத்திய அரசுடன் இணைக்கமான உறவு வைத்திருந்தாலும், அதிமுக கொள்கையில் தடம் புரளவில்லை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
 தேனி மாவட்டம்- போடி சட்டப் பேரவைத் தொகுதியில் 3 ஆவது முறையாக களம் காணும் நிலையில், அவர் தினமணிக்கு அளித்த பேட்டி:
 கே: பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் சிறுபான்மையினரின் வாக்குகளை பெறுவதில் அதிமுகவிற்கு சிக்கல் உள்ளதா?
 ப: தமிழகத்தில் யார் நல்லாட்சி தருவார்கள் என்பதை மக்கள் முடிவு செய்வதற்கான தேர்தல். கடந்த 10 ஆண்டு கால அதிமுக அரசு மீது மக்களுக்கு எந்தவித அதிருப்தியும் இல்லை. அதிமுக அரசு சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாகச் செயல்படுகிறது. சிறுபான்மையினரின் புனித யாத்திரைக்கு அரசு மானியம் வழங்கி வருகிறது. ஹஜ் யாத்திரை பயணிகளுக்காக சென்னையில் விடுதி கட்டப்பட்டு வருகிறது. சிறுபான்மையின பெண்களின் முன்னேற்றத்திற்காக மகளிர் சங்கங்களை உருவாக்கி இணை மானியம் வழங்கி வருகிறோம். எனவே, சிறுபான்மை சமுதாய மக்கள் தேர்தலில் நல்ல முடிவு எடுப்பார்கள்.
 கே: மிகவும் பிற்பட்டோர் பிரிவுக்கான தனி இட ஒதுக்கீட்டில் சீர்மரபினர் சமுதாயத்தினர் அதிருப்தியில் உள்ளது குறித்து...?
 ப: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, நிகழ்கால ஜாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையிலே 68 ஜாதிகளுக்கும் 20 சதவீத தனி ஒதுக்கீடு வழங்க முடியும். ஜாதி வாரி கணக்கெடுப்புக்கு அனுமதி வழங்கி அறிக்கை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள 68 ஜாதியினருக்கும் தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
 கே: அதிமுக அரசை மத்திய அரசு இயக்கி வருவதாகவும், மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து?
 ப: அரசியல் காரணங்களுக்காக அவரவர் தமது தனிப்பட்ட கருத்துகளைக் கூறி வருகின்றனர். தமிழகத்துக்குத் தேவையான திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீட்டை பெறுதற்கு அதிமுக அரசு, மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்பட்டு வருகிறது. மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கிய கொள்கையிலிருந்து அதிமுக தடம் புரளவில்லை. அவர்களது வழியிலேயே நல்லாட்சியை தொடர்ந்து வருகிறோம். மாநிலங்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்கவில்லை.
 கே: திமுகவின் கூட்டணி பலம், அமமுகவிற்கு கிடைக்கும் வாக்குகள் ஆகியவை அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பாதிக்குமா?
 ப: நிச்சயமாக இல்லை. அதிமுக மக்கள் இயக்கம். அதிமுக அரசு மீண்டும் அமைய வேண்டும் என்று நல்ல தீர்ப்பு அளிக்க மக்கள் தயாராகி விட்டனர். அமமுக கடந்த தேர்தல்களைவிட மிக குறைவான வாக்குகளையே பெறும். தமிழகத்தில் 3-ஆம் முறையாக அதிமுக ஆட்சி அமையும்.
 கே: நியூட்ரினோ ஆய்வகம் திட்டம் குறித்து அதிமுகவின் நிலைபாடு என்ன?
 ப: நியூட்ரினோ ஆய்வகம் திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது. அந்தத் திட்டத்தை மீண்டும் தொடங்குவதற்கு அதிமுக எந்தக் காலத்திலும் அனுமதிக்காது. ஆண்டிபட்டி வட்டாரத்தில், வருஷநாடு மலை கிராமங்களில் குடியிருக்கும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வாழ்வுரிமையை அதிமுக அரசு பாதுகாக்கும்.
 கே: முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிப்பது மீண்டும் பிரச்னையாகி இருக்கிறதே, என்ன செய்யப் போகிறீர்கள்?
 ப: முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிவரை தண்ணீர் தேக்குவதற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் அனுமதி பெற்றுத் தந்தார். அதன்படி, முதல் கட்டமாக அணையில் 136 மற்றும் 142 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கப்பட்டது. சிற்றணையை பலப்படுத்தி 152 அடி வரை தண்ணீர் தேக்குவதற்கு மரங்களை வெட்டவும், கட்டுமானப் பொருள்களை கொண்டு செல்லவும் கேரள வனத் துறை அனுமதிக்கவில்லை. இது குறித்து ஆணையத்தில் முறையிட்டுள்ளோம். தமிழக, கேரள அரசுகளிடையே பேச்சு வார்த்தையும் நடந்துள்ளது.
 கே: தேர்தல் கணிப்புகள் திமுகவுக்கு ஆதரவாகக் காணப்படுகின்றனவே..?
 ப: எல்லா தேர்தல்களிலும் தாங்கள் அமோக வெற்றி பெறப்போவதாக ஒரு மாயையை திமுக கருத்துக் கணிப்புகளின் மூலம் உருவாக்குவது புதிதல்ல. 2011, 2016 தேர்தல்களிலும் இதேபோல திமுகதான் வெற்றி பெறப் போவதாகக் கருத்துக் கணிப்புகளை உருவாக்கிப் பரப்பினார்கள். அவர்களிடம் இருக்கும் ஊடக பலத்தால் அதைச் செய்கிறார்கள். அவர்களது கனவை முறியடித்து மூன்றாவது முறையும் "அம்மா' ஆட்சி அமையும். திமுகவின் கனவு கலையும்.
 நேர்காணல்: கோ.ராஜன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com