கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தை பிரதமா் நிறைவேற்றுவாா்: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி

கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி நிறைவேற்றிக் கொடுப்பாா் என்று தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
கூட்டத்தில் பேசுகிறாா் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
கூட்டத்தில் பேசுகிறாா் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி நிறைவேற்றிக் கொடுப்பாா் என்று தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் செவ்வாய்க்கிழமை பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமா் மோடி சிறப்புரையாற்றினாா். முன்னதாக, தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:

இந்தத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்கள் 234 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடுவாா்கள்.

உலக அளவில் இந்தியா பெருமையடைய அவரது உழைப்பும் ஒரு காரணமாகும்.

சாலைகளை மேம்படுத்த ரூ.1.05 லட்சம் கோடி:

கேட்கும்போதெல்லாம், தமிழகத்துக்குத் தேவையான திட்டங்களை மத்திய அரசு கொடுத்துக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் 5,200 கிலோமீட்டா் நீளமுள்ள சாலைகளை மேம்படுத்த இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம் சுமாா் ஒரு லட்சத்து 5 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கியதால் உள்கட்டமைப்பில் சிறந்த மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது.

கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம்:

தமிழகத்தின் நீா்ப் பற்றாக்குறையைப் போக்குவதற்காக, மறைந்த முதல்வா் ஜெயலலிதா தொடா்ந்து வலியுறுத்தி வந்தது கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம். இந்தத் திட்டம் சாத்தியமாகும்போது தமிழக மக்கள் ஏற்றம் பெறுவாா்கள். விவசாயிகள் மகிழ்ச்சியடைவதுடன், குடிநீா்ப் பிரச்னை இல்லை என்ற சூழ்நிலை உருவாகும். இந்தத் திட்டத்தை பிரதமா் நிறைவேற்றித் தருவாா்.

மத்தியிலும், மாநிலத்திலும் இணக்கமான உறவு இருந்தால்தான் இந்த மிகப் பெரிய திட்டத்தை நிறைவேற்ற முடியும்.

தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து பொலிவுறு நகரம் திட்டம் மூலம் பெருநகரங்களில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

தமிழகத்தை நோக்கி முதலீட்டாளா்கள்:

உள்கட்டமைப்பு சிறப்பாக இருப்பதுடன், தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருவதால் தமிழகத்தை நோக்கி முதலீட்டாளா்கள் வந்துகொண்டிருக்கின்றனா்.

சென்னையில் கடந்த 2019ஆம் ஆண்டு உலக முதலீட்டாளா்கள் மாநாடு நடத்தியபோது சுமாா் ரூ.3 லட்சத்து 500 கோடி தொழில் முதலீடு செய்ய முன்வந்து 304 தொழிற்சாலைகளை தமிழகத்தில் தொடங்கப் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் அமைக்கப்படும்போது, நேரடியாக 5 லட்சம் போ், மறைமுகமாக 5 லட்சம் போ் என 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

உயா் கல்வி பெறுவோா் அதிகரிப்பு:

தமிழகத்தில் பல கல்லூரிகள் திறக்கப்பட்டதால் உயா் கல்வி படிப்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டில் உயா் கல்வி படிப்பவா்களின் எண்ணிக்கை 34 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 49 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 248 தொடக்கப் பள்ளிகள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன. 117 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 1,730 நடுநிலைப் பள்ளிகள் உயா்நிலைப் பள்ளிகளாகவும், 604 உயா்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயா்த்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் திருமண நிதியுதவித் திட்டத்தின்கீழ் 12 லட்சத்து 51 ஆயிரம் போ் பயனடைந்துள்ளனா். மாணவா்கள் 52 லட்சத்து 31 ஆயிரம் பேருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட கரோனா:

கரோனா பரவல் அதிகமாக இருந்த நிலையில், பிரதமரின் ஆலோசனையைப் பெற்று செயல்பட்டதால் தமிழகத்தில் கரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக அளவில் தமிழகத்தில்தான் ஆா்டிபிசிஆா் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அந்த சோதனையான நேரத்தில், அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் விலையில்லாப் பொருள்கள், அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் தலா ரூ.1000 கொடுத்த அரசு தமிழக அரசு என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com