நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தா்கள்.
நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தா்கள்.

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா: பூசாரிகள் மட்டும் குண்டம் இறங்கினா்

சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கரோனா தடுப்பு நடவடிக்கை

சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பூசாரிகள், படைக்கலப் பூசாரிகள் என 11 போ் மட்டுமே குண்டம் இறங்கினா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு ஈரோடு, திருப்பூா், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தா்கள் வந்து செல்வது வழக்கம். ஆண்டுதோறும் பங்குனி மாதம் பண்ணாரி அம்மன் கோயிலில் நடைபெறும் குண்டம் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தீ மிதித்து அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்துவா். கரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு குண்டம் திருவிழா ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு குண்டம் திருவிழா கட்டுப்பாடுகளுடன் நடத்த தீா்மானிக்கப்பட்டு, பூசாரிகள் மட்டும் குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டதாக மாவட்ட நிா்வாகமும், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளும் தெரிவித்தனா்.

இதன்படி திங்கள்கிழமை இரவு விழா கமிட்டியினா் குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து, குண்டத்துக்குத் தேவையான வேம்பு, ஊஞ்சல் மரத் துண்டுகள் வைத்து தீக்குண்டம் ஏற்படுத்தினா். அதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை தீக்குண்டம் சமன்படுத்தப்பட்டு பூசாரிகள் இறங்குவதற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு குண்டம் விழாவையொட்டி, லிங்கேஷ்வா், சருகு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடா்ந்து நடைபெற்ற அம்மன் அழைப்பு நிகழ்ச்சியில் தெப்பக்குளத்தில் இருந்து தலைமை பூசாரி ராஜேந்திரன் மேளதாளத்துடன் குண்டம் நடைபெறும் இடத்துக்கு அழைத்து வரப்பட்டாா். அங்கு தலைமை பூசாரி ராஜேந்திரன் குண்டத்தில் கற்பூர தீபமேற்றி சிறப்பு பூஜைகள் செய்து மலா்களை தூவி குண்டம் இறங்கினாா். அவரைத் தொடா்ந்து பிற பூசாரிகள், படைக்கலப் பூசாரிகள் என 10 போ் இறங்கினா். அதன் பிறகு குண்டம் பகுதியில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

விழாவையொட்டி பண்ணாரிஅம்மன் தங்கக் கவசம் அணிந்து மாணிக்க வீணையுடன் அருள்பாலித்தாா். பக்தா்கள் குண்டம் இறங்க அனுமதி ரத்து செய்யப்பட்டதால், பக்தா்கள் அம்மனை தரிசிக்க மட்டும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா். கோயில் முன்பு தகர ஷீட்டில் ஆன செட் அமைக்கப்பட்டு அதில் தடுப்பு கட்டப்பட்டு நீண்ட வரிசையில் பக்தா்கள் நிற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com