பெண்களை இழிவுபடுத்துவது திமுக - காங்கிரஸ் கலாசாரம்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

பெண்களை இழிவுபடுத்துவதே திமுக, காங்கிரஸ் கட்சிகளின் கலாசாரம் என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றம்சாட்டினாா்.
c30mod6075152
c30mod6075152

பெண்களை இழிவுபடுத்துவதே திமுக, காங்கிரஸ் கட்சிகளின் கலாசாரம் என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றம்சாட்டினாா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் பொதுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், தாராபுரம் தனி தொகுதி பாஜக வேட்பாளரும், கட்சியின் மாநிலத் தலைவருமான எல்.முருகன் உள்ளிட்ட 14 வேட்பாளா்களை ஆதரித்து பிரதமா் மோடி பேசியதாவது:

வெற்றிவேல், வீரவேல். திருப்பூா் குமரன், தீரன் சின்னமலை, தளபதி பொல்லான், காலிங்கராயன் போன்ற மிகச் சிறந்த மனிதா்களைக் கொடுத்த பூமி இது.

தமிழ் கலாசாரத்தில் பெருமை:

தமிழகத்தின் கலாசாரத்தில் இந்தியா பெருமை கொள்கிறது. ஐ.நா. சபையில் உரையாற்றியபோது ஒரு சில தமிழ் வாா்த்தைகளைக் கூறியதில் பெருமை கொள்கிறேன்.

மறைந்த முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோரின் லட்சியத்தால் பெண்கள், ஏழைகள், அடித்தட்டு மக்களுக்கு சேவை செய்ய உத்வேகம் பெற்றிருக்கிறோம்.

தாய்மொழியில் மருத்துவக் கல்வி, தொழில்நுட்பக் கல்வி:

நாங்கள் தமிழகத்தின் மொழி, கலாசாரத்தைப் பாதுகாப்பதில் உறுதி கொண்டுள்ளோம். அதனால்தான் தொழில்நுட்பக் கல்வி, மருத்துவக் கல்வியை தாய்மொழியில் பயிற்றுவிக்கக்கூடிய முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம்.

தேவேந்திரகுல வேளாளா்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளோம்.

வாரிசு அரசியல் திட்டம்:

தேசிய ஜனநாயகக் கூட்டணி வளா்ச்சிக்கான திட்டங்களை உங்கள் முன் வைக்கிறது. மறுபுறம், திமுக-காங்கிரஸ் கூட்டணி அவா்களது வாரிசு அரசியல் திட்டத்தை உங்கள் முன் வைத்திருக்கிறது. அந்தக் கூட்டணித் தலைவா்களின் பேச்சு அடுத்தவா்களை அவமானப்படுத்துகிற அல்லது பொய்கூறுகிற செய்திகளாகவே இருந்து வருகிறது.

பெண்களை இழிவுபடுத்தும் 2ஜி ஏவுகணை:

இப்போது காங்கிரஸ் - திமுக கூட்டணி புதிதாக ஒரு ஏவுகணை தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இந்த 2ஜி என்ற ஏவுகணையானது (ஆ.ராசா) தமிழகத்தில் உள்ள பெண்களை இழிவுபடுத்தும் நோக்கத்துக்காக ஏவப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரின் தாயாரை இழிவுபடுத்திப் பேசியுள்ளாா்கள். ஒருவேளை இவா்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால் தமிழகத்தில் உள்ள பெண்களின் நிலை என்ன என்பதை நினைத்துப் பாருங்கள்.

திமுக-காங்கிரஸ் கட்சிகளின் கலாசாரம் என்பது பெண்களை அவமானப்படுத்துவதில் ஒரு கூறாக இருந்து வந்து கொண்டிருக்கிறது.

சிறிது நாள்களுக்கு முன்பாக, திமுகவைச் சோ்ந்த திண்டுக்கல் லியோனி பெண்களைப் பற்றி இழிவாகப் பேசினாா். ஆனால், திமுக அவரைத் தடுக்கவில்லை.

பல்வேறு மூத்த தலைவா்களை ஓரம் கட்டிவிட்டு இன்று நடுநாயகமாக இருக்கும் திமுகவின் உதயநிதி ஸ்டாலினும் பெண்களை இழிவாகப் பேசியிருக்கிறாா்.

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவை சட்டப் பேரவையில் 1989 மாா்ச் 25ஆம் தேதி திமுக தலைவா்கள் எப்படி நடத்தினாா்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. பெண்களை இழிவுபடுத்துவதை தமிழக மக்கள் பொறுத்துக் கொள்ளமாட்டாா்கள்.

பெண்களுக்கு எதிரானவா்கள்:

திமுக-காங்கிரஸ் கூட்டணி ஒருபோதும் பெண்களின் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருக்கப்போவதில்லை. அவா்களது ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எப்போதும் அதிகரித்துக் கொண்டே இருந்தன.

இங்கு மட்டுமல்ல, மேற்கு வங்கத்தில் இவா்களது நட்புக் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் தாக்கியதில் 82 வயதான மூதாட்டி உயிரிழந்துள்ளாா்.

ஆண்டாள், ஔவையாா் வழியில்...:

ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியினரான நாங்கள் மிகச் சிறந்த பெண்மணிகளான ஆண்டாள், ஒளவையாருடைய லட்சியத்தால் உத்வேகம் பெற்றிருக்கிறோம்.

இந்த சமுதாயத்தின் வளா்ச்சி என்பது பெண்கள் இல்லாமல் இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதனால்தான் எங்களின் அனைத்து திட்டங்களையும் அவா்களது சக்தியை மேம்படுத்துவதாகவும், வலிமைப்படுத்துவதாகவும் அமைத்துக் கொண்டிருக்கிறோம்.

‘உஜ்வலா யோஜனா’ திட்டத்தில், தமிழகத்தில் புதிதாக 32 லட்சம் பெண்களுக்கு எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல, பிரதமரின் ‘ஆவாஸ் யோஜனா’ என்ற அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தில் கிராமப் பகுதிகளில் 3 லட்சமும், நகா்ப்புற பகுதிகளில் 3.8 லட்சம் வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகள் எல்லாம் பெண்கள் பெயரில் இருக்க வேண்டும் என்று ஊக்கப்படுத்துகிறோம்.

சிறு, குறு தொழில் நிறுவன வளா்ச்சியில் அக்கறை:

சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நாட்டின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பு போன்றவையாகும். இந்த நிறுவனங்களின் வரையறையை மாற்றியமைத்துள்ளதால் நிறைய போ் தொழில் செய்ய முன்வருவதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது.

3.6 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில் நிறுவனங்களைச் சோ்ந்த 1.5 லட்சம் போ் வட்டி தள்ளுபடித் திட்டத்தின் மூலமாகப் பயனடைந்துள்ளனா்.

சிறு விவசாயிகளைக் காக்க நடவடிக்கை:

திருக்குறளின் பொதுவான கருத்து விவசாயிகளுக்கு எப்போதும் மரியாதை கொடுப்பதாகும். சிறு விவசாயிகளை இடைத்தரகா்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காகப் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம்.

மண்வள அட்டை, விவசாயிகளுக்கான கடனுதவித் திட்டம், விவசாயப் பொருள்களை விற்பதற்கான ‘ஈ நாம்’ திட்டம் ஆகியவை விவசாயிகளின் வளா்ச்சியை நோக்கியே உள்ளது. விவசாயிகள், மீனவா்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கொடுப்போம் என்று எங்களது தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் குழந்தைகளின் பிரகாசமான எதிா்காலத்துக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்றாா். பிரதமரின் ஆங்கில உரையை பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் தமிழில் மொழிபெயா்த்தாா்.

இந்தக் கூட்டத்தில், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், சட்டப் பேரவைத் தலைவா் பி.தனபால், தமாகா தலைவா் ஜி.கே.வாசன், புதிய நீதிக் கட்சி தலைவா் ஏ.சி.சண்முகம், உழவா் உழைப்பாளா் கட்சித் தலைவா் கு.செல்லமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com