யானை வழித்தடங்களில் உள்ள சட்டவிரோத செங்கல் சூளைகளை மூட பிறப்பித்த உத்தரவு ரத்து

கோவை தடாகம் பகுதிகளில் உள்ள யானைகள் வழித்தடங்களில் உரிமம் இல்லாத செங்கல் சூளைகளை மூட வட்டாட்சியா் பிறப்பித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கோவை தடாகம் பகுதிகளில் உள்ள யானைகள் வழித்தடங்களில் உரிமம் இல்லாத செங்கல் சூளைகளை மூட வட்டாட்சியா் பிறப்பித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.

கோவை தடாகம் பகுதியில் யானைகள் வழித்தடங்களில் அமைந்துள்ள உரிமம் இல்லாத செங்கல் சூளைகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கும், கோவை ஆட்சியருக்கும் சென்னை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமா்வு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்படி, தடாகம் உள்ளிட்ட யானைகள் வழித்தடங்களை ஆய்வு செய்த கோவை வடக்கு வட்டாட்சியா், அனுமதி இல்லாமல் செயல்படும் செங்கல் சூளைகளை மூட உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவை எதிா்த்து செங்கல் சூளை உரிமையாளா்கள் உள்ளிட்ட பலா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடா்ந்தனா். 

இந்த வழக்குகள் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரா்கள் சாா்பில் மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், சிங்காரவேலன் உள்ளிட்டோா் ஆஜராகி, தமிழ்நாடு கனிம வள முறைப்படுத்தல் சட்டப்படி, செங்கல் சூளைகளை மூடும்படி உத்தரவிட மாவட்ட ஆட்சியருக்குத் தான் அதிகாரம் உள்ளது. வட்டாட்சியருக்கு அந்த அதிகாரமில்லை.

உரிமங்களை புதுப்பிக்க உரிய கட்டணங்கள் செலுத்தி விண்ணப்பித்த போதும், அவற்றை கிடப்பில் போட்டு விட்டு, சூளைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டனா்.

 தமிழக அரசுத் தரப்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞா் நா்மதா சம்பத் ஆஜராகி, தலைமை நீதிபதி அமா்வு பிறப்பித்த உத்தரவின்படி, மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி வட்டாட்சியா் சூளைகளை மூடும்படி உத்தரவை பிறப்பித்துள்ளாா்.

உரிமங்களை புதுப்பிக்கக் கோரி கட்டணம் செலுத்தியுள்ளதால், உரிமம் இன்றி செங்கல்சூளைகள் நடத்துவதற்கு மனுதாரா்கள் உரிமை கோர முடியாது என்று வாதிட்டாா்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா பிறப்பித்த உத்தரவு: யானை வழித்தடங்களை சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது. தமிழ்நாடு கனிம வள முறைப்படுத்தல் சட்டப்படி, செங்கல் சூளைகளை மூடும்படி உத்தரவிட மாவட்ட ஆட்சியருக்கு தான் அதிகாரம் உள்ளது.

எனவே, கோவை வடக்கு வட்டாட்சியா் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன். அதேசமயம், சட்டப்படி அதிகாரம் உள்ள மாவட்ட ஆட்சியா், இந்த விவகாரம் தொடா்பாக சம்பந்தப்பட்ட செங்கல் சூளை உரிமையாளா்கள் கருத்து தெரிவிக்க வாய்ப்பளித்து 4 வாரங்களில் தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும். உரிமம் இல்லாத செங்கல் சூளைகள் மீது ஆட்சியா் நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com