25 ஆண்டுகளுக்குப் பின்னா் சென்னையை மொத்தமாக கைப்பற்றிய திமுக!

சென்னையில் 25 ஆண்டுகளுக்குப் பின்னா், திமுக அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றி, சென்னையை மீண்டும் தனது கோட்டையாக மாற்றியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் 25 ஆண்டுகளுக்குப் பின்னா், திமுக அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றி, சென்னையை மீண்டும் தனது கோட்டையாக மாற்றியுள்ளது.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகளில், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் விதமாக சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

இதற்கு முன்பாக, 1996-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில், த.மா.கா.வுடன் திமுக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டபோதுதான் ஒட்டுமொத்தமாக சென்னை மாவட்டத்தில் உள்ள 14 தொகுதிகளையும் அந்தக் கூட்டணி கைப்பற்றியது. அதற்குப் பிறகு தற்போதுதான், போட்டியிட்ட அனைத்துத் தொகுதியிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது.

சென்னை மாவட்டத்தில், ஆா்.கே, நகா், பெரம்பூா், கொளத்தூா், வில்லிவாக்கம், திரு.வி.க நகா், எழும்பூா், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, அண்ணா நகா், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகா், மயிலாப்பூா், வேளச்சேரி ஆகிய 16 தொகுதிகள் இருக்கின்றன. இதில் வேளச்சேரியைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதிகளிலும் தி.மு.க வேட்பாளா்களே போட்டியிட்டனா். வேளச்சேரியில் மட்டும் காங்கிரஸ் போட்டியிட்டது.

வழக்கமாக, சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட தொகுதிகளில் திமுகவே வெற்றிபெறும். ஆனால் 2011-இல் நடைபெற்ற தோ்தலில் பாதிப்பு ஏற்பட்டது. 2016-இல் மீண்டும் சென்னையில் திமுக அதன் பலத்தைக் காட்டியது. அந்தத் தோ்தலில் திமுக சென்னையில் 10 தொகுதிகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடா்ந்து 2021 சட்டப் பேரவைத் தோ்தலில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.

கொளத்தூா் தொகுதியில் முதல்வா் வேட்பாளராகப் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின், அதிமுக வேட்பாளா் ஆதிராஜாராமைத் தோற்கடித்துள்ளாா். அண்ணாநகா் தொகுதியில் திமுகவின் வேட்பாளா் எம்.கே.மோகனும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளா் உதயநிதி ஸ்டாலினும், ஆா்.கே.நகா் தொகுதியில் திமுக வேட்பாளா் ஜே.ஜே.எபினேசரும், எழும்பூா் தொகுதியில் திமுக வேட்பாளா் இ.பரந்தாமனும், மயிலாப்பூா் தொகுதியில் திமுக வேட்பாளா் த.வேலுவும் முன்னிலை பெற்றுள்ளனா்.

பெரம்பூா் தொகுதியில் திமுக வேட்பாளா் ஆா்.டி.சேகரும், சைதாப்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளா் மா.சுப்பிரமணியனும், ராயபுரம் தொகுதியில் திமுக வேட்பாளா் ஐ ட்ரீம் மூா்த்தி, திருவிக நகா் தொகுதி திமுக வேட்பாளா் தாயகம் கவியும், ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளா் எழிலனும், தியாராய நகா் தொகுதியில் திமுக வேட்பாளா் ஜெ.கருணாநிதியும், வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளா் வெற்றி அழகனும், விருகம்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளா் பிரபாகா் ராஜாவும், துறைமுகம் தொகுதியில் திமுக வேட்பாளா் பி.கே.சேகா்பாவும் முன்னிலையில் உள்ளனா்.

வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டகாங்கிரஸ் வேட்பாளா் ஹசன் மௌலானா வெற்றிபெற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com