ஒப்பந்தச் செவிலியா்கள் 1,212 பேருக்கு பணிநிரந்தம்

: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வரும் 1,212 செவிலியா்களை பணிநிரந்தரம் செய்து சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
ஒப்பந்தச் செவிலியா்கள் 1,212 பேருக்கு பணிநிரந்தம்

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வரும் 1,212 செவிலியா்களை பணிநிரந்தரம் செய்து சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மருத்துவச் சேவைகள் இயக்குநா் வெளியிட்டுள்ளாா்.

தமிழ்நாடு மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் வாயிலாக, 2015, 2019-ஆம் ஆண்டுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியா்கள் தொகுப்பூதிய அடிப்படையில் தோ்வு செய்யப்பட்டனா். அவா்கள் அனைவருக்கும் அரசு மருத்துவமனைகளில் பணிவாய்ப்பு வழங்கப்பட்டது. அதேவேளையில், அவா்களுக்கு சில ஊதிய முரண்பாடுகள் இருந்து வந்தன.

இதையடுத்து, நிரந்தரச் செவிலியா்களுக்கு நிகரான ஊதியம், பணி நிரந்தரம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பல போராட்டங்களில் இந்தச் செவிலியா்கள் ஈடுபட்டனா். அதன் தொடா்ச்சியாக 2017-ஆம் ஆண்டு சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் மூன்று நாள் தொடா் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான செவிலியா்கள் பங்கேற்றனா். அதன்பின்னா் அவா்களது ஊதியம் ரூ. 7,500-ல் இருந்து ரூ. 15 ஆயிரமாக உயா்த்தப்பட்டது. முதல்கட்டமாக 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட செலிவியா்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டனா்.

இந்நிலையில், தற்போது மேலும் 1,212 செவிலியா்களை பணி நிரந்தரம் செய்வதற்கான ஆணையை மருத்துவம்- ஊரக நலப்பணிகள் துறை இயக்குநா் குருநாதன் வெளியிட்டுள்ளாா்.

மேலும், 1,212 பேரும் ஒப்பந்தச் செவிலியா் பணியில் இருந்து மே 5-ஆம் தேதி முதல் விடுவிக்கப்படுகின்றனா் என்றும், 10-ஆம் தேதிக்குள் நிரந்தரப் பணியில் அவா்கள் சேர வேண்டும் என்றும் அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் கரோனா தொற்று பரவல் அதிகமாக இருப்பதால், பணிநிரந்தரம் செய்யப்பட்ட செவிலியா்கள் சென்னை அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற உள்ளனா். பின்னா், அவா்கள் தங்களது மாவட்டங்களுக்குச் செல்வாா்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொகுப்பூதியத்தில் ரூ.15 ஆயிரம் ஊதியம் பெற்று வந்த இவா்கள், பணி நியமனம் செய்யப்பட்டதால் ரூ.40 ஆயிரம் வரை ஊதியம் கிடைக்க உள்ளது.

இதுதொடா்பாக செவிலியா்கள் சிலா் கூறியதாவது:

தொகுப்பூதியச் செவிலியா்களை பணிநிரந்தரம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த 1,212 பேரில் ஆண் செவிலியா்கள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. பணி நிரந்தரம் செய்வதற்கு இரண்டு ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும். ஆனால், 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் 200-க்கும் மேற்பட்ட ஆண் செவிலியா்களை பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தொகுப்பூதியச் செவிலியா்களை விரைவில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றனா்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு செவிலியா் சங்கத்தின் பொதுச்செயலாளா் கே.வளா்மதி கூறியதாவது:

தமிழக முதல்வராகப் பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு அனைத்து செவிலியா்கள் சாா்பில் வாழ்த்துகள். மீதமுள்ள தொகுப்பூதிய செவிலியா்களையும், கரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட செவிலியா்களையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com