அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகளை முடக்குவதா? - ராமதாஸ் கண்டனம்!

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்சிஜன் படுக்கைகளை செயல்படாமல் முடக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ்
ராமதாஸ்


சென்னை: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்சிஜன் படுக்கைகளை செயல்படாமல் முடக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”சென்னையில் வேகமாக பரவி வரும் கரோனா நோய்த்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல், உயிருக்கு போராடி வரும் நிலையில், சென்னை ராஜிவ்காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்சிஜன் படுக்கைகளைக் கொண்ட பிரிவு செயல்படாமல் முடக்கி வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதிர்ச்சி மற்றும் வேதனையளிக்கும் இந்த செய்திகள் உண்மையாக இருந்தால் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தெற்காசியாவின் முதன்மையான 10 மருத்துவமனைகளில் சென்னை ராஜிவ்காந்தி அரசு தலைமை மருத்துவமனை குறிப்பிடத்தக்கதாகும். ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டு, அனைத்து வகையான மருத்துவ சேவைகளையும் அளிக்கும் மருத்துவ நிறுவனமாக உயர்ந்து நிற்கும் இந்த மருத்துவமனையில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகச்சிறப்பான மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் இந்த மருத்துவமனையின் மிகச்சிறப்பான கட்டமைப்புகள் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பயன்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனையில் முடவியல் தொகுதியில் உள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 120 படுக்கைகள் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படுத்தப்படாமல் முடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இதற்கான காரணம் புரியவில்லை.

தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரப்படி கரோனா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகள் மற்றும் வீட்டுத் தனிமையில் மருத்துவம் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1.25 லட்சத்தைத் தாண்டிவிட்டது. இவர்களில் சுமார் 50,000 பேர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் 10 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களில் பெரும்பான்மையினருக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தேவைப்படுகின்றன. இத்தகைய சூழலில் முடவியல் தொகுதியில் உள்ள ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் பொக்கிஷம் ஆகும். அவற்றை பயன்படுத்தாமல் முடக்குவது நல்லதல்ல.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் கரோனா முதல் அலை தாக்கிய போது முடவியல் தொகுதி கோவிட் ஒய் தொகுதியாக அறிவிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான நோயாளிகளுக்கு மருத்துவம் அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ள நிலையில், நவீன வசதிகள் கொண்ட சிகிச்சைப் பிரிவை மக்கள் பயன்பாட்டுக்காக மருத்துவமனை நிர்வாகம் திறந்து விடாதது ஏன்? என்பது தான் வியப்பாக உள்ளது. கடந்த 10 நாள்களுக்கும் மேலாக ஒவ்வொரு நாளும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் கரோனா நோயாளிகளுடன் சராசரியாக 40 அவசர ஊர்திகள் ராஜிவ்காந்தி அரசு தலைமை மருத்துவமனைக்கு வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஆக்சிஜன் படுக்கை இல்லை என்று கூறி திருப்பி அனுப்பப்படுகின்றன. நேற்று கூட அவசர ஊர்திகளில் வந்த சுமார் 20 கரோனா நோயாளிகள் ஆக்சிஜன் படுக்கை இல்லை என்று கூறி திருப்பி அனுப்பப்பட்டனர்.

முடவியல் தொகுதியில் உள்ள ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சைப் பிரிவு திறக்கப்படாததால் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவம் கிடைக்காமல் தவிக்கின்றனர். அவர்களுக்கான மருத்துவ வாய்ப்புகளை முடக்கி வைத்து, அவர்களில் பலரின் உயிரிழப்புக்கு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை காரணமாக இருக்கக் கூடாது. உடனடியாக முடவியல் தொகுதியை கரோனா சிறப்பு மருத்துவப் பிரிவாக அறிவித்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மருத்துவம் அளிக்க அரசு முன்வர வேண்டும்.

மற்றொருபுறம் தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடங்கி, சேலம், தர்மபுரி, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கடும் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் கரோனா நோயாளிகள் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையை மாற்றி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகளுக்கு போதிய அளவு ஆக்சிஜன் வழங்கப்படுவதையும், அவசரத் தேவைகளுக்கு ஆக்சிஜன் இருப்பு வைக்கப்படுவதையும் உறுதி செய்ய தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்” என்று  ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com