காங்கயத்தில் கல்வெட்டு சேதம்: அதிமுகவினர் சாலை மறியல்

காங்கயத்தில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
காங்கயத்தில் மர்ம நபர்களால் சிதைக்கப்பட்ட கல்வெட்டு
காங்கயத்தில் மர்ம நபர்களால் சிதைக்கப்பட்ட கல்வெட்டு


காங்கயம்: காங்கயத்தில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

காங்கயம், ஏ.சி.நகரில் பிஏபி வாய்க்கால் பாலம் மீது வைக்கப்பட்டிருந்த கல்வெட்டை சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காங்கயம் நகரம், திருப்பூர் சாலையில் காங்கயம் நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவரும், திருப்பூர் மாநகர் மாவட்ட இளைஞரணி இணைச் செயலருமான சி.கந்தசாமி தலைமையில், புதன்கிழமை காலை 10 மணியளவில் 100-க்கும் மேற்பட்ட அதிமுக வினர் சாலை மறியல் செய்வதற்காகத் திரண்டனர்.

சாலை மறியல் செய்ய முயன்ற அதிமுக வினரிடம் பேச்சு வார்த்தை
நடத்தும் காங்கயம் காவல் ஆய்வாளர் மணிகண்டன் 

இது குறித்து நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் சி.கந்தசாமி கூறியபோது, காங்கயம் 1 ஆவது வார்டில் உள்ள திருவிக நகருக்கும், ஏ.சி.நகருக்கும் இடையே செல்லும் பிஏபி வாய்க்கால் மீது பாலம் கட்டுவதற்கு அப்போதைய எம்.எல்.ஏ., தனியரசுவிடம் கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கை ஏற்கப்பட்டு, இப்பகுதி மக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2016-2017 திட்டத்தின் கீழ், பிஏபி வாய்க்கால் மீது ரூ.15.50 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டப்பட்டு, அது குறித்த கல்வெட்டும் வைக்கப்பட்டது.

இந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியான மே 2 ஆம் தேதி நள்ளிரவு, சில மர்மநபர்கள் மேற்கண்ட கல்வெட்டை சேதப்படுத்தியதோடு, அதில் இருந்த எனது பெயரையும் சிதைத்துள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பணித்துறை அலுவலகத்திலும், காங்கயம் காவல் துறையிலும் புகார் கொடுத்துள்ளோம் என்றார்.

இதனையடுத்து, சாலை மறியல் செய்ய முயன்றவர்களைத் தடுத்தி நிறுத்தி, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காங்கயம் காவல் ஆய்வாளர் மணிகண்டன், உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து, அதிமுகவினர் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் திருப்பூர் சாலைப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com