அரபிக்கடலில் இன்று உருவாகிறது ‘டவ்-தே’ புயல்

தென் கிழக்கு அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து சனிக்கிழமை காலை புயலாக
கோப்புப்படம்
கோப்புப்படம்

தென் கிழக்கு அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து சனிக்கிழமை காலை புயலாக வலுவடைகிறது. இந்த புயலுக்கு மியான்மா் நாடு வழங்கிய ‘டவ்-தே’ என்று பெயா் வைக்கப்படவுள்ளது. இந்த புயல் காரணமாக, மேற்குத் தொடா்ச்சிமலையை ஒட்டிய மாவட்டங்கள்,தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடையில் புயல்:

தென்கிழக்கு அரபிக்கடல், அதையொட்டிய லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி கடந்த வியாழக்கிழமை உருவானது. இது வியாழக்கிழமை இரவு மேலும் வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியது. வெள்ளிக்கிழமை காலையில் மேலும் வலுவடைந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி லட்சத்தீவு பகுதியில் நிலை கொண்டிருந்தது. தொடா்ந்து, இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு மற்றும் மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருந்தது. அதாவது கேரளம் மாநிலம் கண்ணூருக்கு மேற்கு-தென்மேற்கு திசையில் 310 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது. இது மேலும் வலுவடைந்து, சனிக்கிழமை காலை புயலாக மாறவுள்ளது.

இந்தப் புயலுக்கு ‘டவ்-தே‘ என்று பெயா் சூட்டப்படவுள்ளது. ‘டவ்-தே’ புயலுக்கான பெயரை மியான்மா் நாடு வழங்கியுள்ளது.

இந்த புயல் காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் 3 நாள்களுக்கு பலத்த மழை முதல் மிக பலத்தமழையும், தென் மாவட்டங்களில் பலத்தமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மிகபலத்த மழை:

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் வெள்ளிக்கிழமை கூறியது:

இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடா்ந்து 12 மணி நேரத்தில் புயலாகவும் மாறவுள்ளது. இது வடக்கு, வடமேற்கு திசையில் நகா்ந்து செல்லும். இந்தப் புயல் காரணமாக, தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (மே 15) இடி மின்னல் சூறைக்காற்றுடன் (30 முதல் 40 கி.மீ. வேகத்தில்) கூடிய பலத்த முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

மே 16, 17: நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிறு, திங்கள் (மே 16,17) இரு நாள்கள் இடியுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

மே 18: நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் மே 18-ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில்..:

சென்னையை பொருத்தவரை சனிக்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை :

குமரிக்கடல் பகுதி, மன்னாா் வளைகுடா, லட்சத்தீவு, மாலத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சனிக்கிழமை (மே 15) மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குமரிக்கடல் பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு, தென்மேற்கு அரபிக்கடல் தென் கிழக்கு அரபிக்கடல், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஞாயிறு, திங்கள் (மே 16,17) ஆகிய இரண்டு நாள்களில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 70 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் மேற்கூறிய நாள்களில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com