காரைக்காலில் கரோனாவால் உயிரிழந்தவர் சடலத்தை அப்புறப்படுத்துவதில் தாமதம்: பொதுமக்கள் சாலை மறியல்

காரைக்காலில் கரோனா தொற்றால்  வீட்டில் உயிரிழந்தவர் சடலத்தை அப்புறப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால், குடும்பத்தினர், தெருவாசிகள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்காலில் கரோனாவால் உயிரிழந்தவர் சடலத்தை அப்புறப்படுத்தக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
காரைக்காலில் கரோனாவால் உயிரிழந்தவர் சடலத்தை அப்புறப்படுத்தக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.


காரைக்கால்: காரைக்காலில் கரோனா தொற்றால்  வீட்டில் உயிரிழந்தவர் சடலத்தை அப்புறப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால், குடும்பத்தினர், தெருவாசிகள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்காலில் கரோனா தொற்றால் அண்மை காலமாக தினமும் ஏறக்குறைய 5 பேர் வீதம் உயிரிழக்கின்றனர். தனியார் அமைப்பு சார்பில் சடலம் அடக்க தலத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பால் காலத்தோடு அடக்கம் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது.

பேரிடர் மேலாண்மைத்துறையானது உள்ளாட்சித்துறை பங்களிப்புடன் இப்பணியை மேற்கொள்ளவேண்டும்  என பல்வேறு தரப்பினர் கோரிவருகின்றனர்.

இந்நிலையில், காரைக்கால் நகரப் பகுதி  தோமாஸ் அருள் வீதியில் உள்ள பாத்திமா மேரி(64),  கரோனா தொற்றால் வீட்டுத் தனிமையில்  சிகிச்சை பெற்றுவந்தவர் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். இவரது மகனுக்கும் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

உயிரிழந்தவர் சடலத்தை அப்புறப்படுத்த அந்த பகுதியினர் காரைக்கால் நகராட்சி மற்றும் நலவழித்துறையினருக்கு சனிக்கிழமை இரவு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் தெருவாசிகள் அரசலாறு பாலம் அருகே அரசு நிர்வாகத்தைக் கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட  தகவலறிந்து காரைக்கால் நகரக் காவல்நிலைய ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் போலீசார் நிகழ்விடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தினார். சடலத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்ததன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com