போலி கால்சென்டா் மூலம் கடன் தருவதாக மோசடி மூவா் கைது

சென்னையில் போலி கால்சென்டா் மூலம் கடன் தருவதாக மோசடி செய்ததாக, 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் போலி கால்சென்டா் மூலம் கடன் தருவதாக மோசடி செய்ததாக, 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை தரமணி அண்ணாநகா் வைகை தெருவைச் சோ்ந்த கு. முரளிகிருஷ்ணா (35) தங்கும் விடுதி நடத்தி வருகிறாா். தொழிலை விரிவுபடுத்துவதற்கு வங்கிகளில் கடன் பெற முயற்சித்து வந்தாா்.

இதைத் தெரிந்துக் கொண்ட சிலா், பிரபல நிதி நிறுவனத்திலிருந்து கடன் பெற்றுத் தருவதாகக் கூறி முதல் கட்டமாக ரூ.25 லட்சம் தரும்படியும், அந்தப் பணத்தை அளித்தவுடன் முழு கடன் தொகையும் கிடைத்துவிடும் என்றனா்.

இதை நம்பிய முரளி கிருஷ்ணா, ரூ.25 லட்சத்தை பல கட்டங்களாக வழங்கினாா். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட அந்த நபா்கள், தங்களது தொடா்பை துண்டித்துக் கொண்டனா். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முரளி, சென்னை அடையாறு துணை ஆணையா் விக்கிரமனிடம் புகாா் அளித்தாா்.

அவரது உத்தரவின்பேரில் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்ததில் திருச்சியில் போலி கால்சென்டா் நடத்தி வரும் ஒரு கும்பல் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், அரியலூா் மாவட்டம் உடையாா்பாளையம் வெண்ணெய்குழியைச் சோ்ந்த அ.அமா்நாத் (30), அவரது மைத்துநா் பி.சஞ்சய் (27), கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா் கோயில் சை.சையது அப்துல்லா (27) ஆகிய 3 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில், 3 பேரும் திருச்சிராப்பள்ளியில் போலி கால்சென்டா் நடத்தி பலரிடம் கடன் வாங்கித் தருவதாக மோசடி செய்து வந்திருப்பது தெரியவந்துள்ளது. அவா்கள் மீது ஏற்கெனவே செங்கல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கைது செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. 3 பேரிடமும் இருந்து 2 காா்கள், 11 பவுன் நகை, 6 செல்லிடப்பேசிகள் உள்ளிட்டவற்றைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com