கரோனா தீவிரமடையாமல் தடுக்கும் புதிய சிகிச்சை

கரோனா தொற்றுக்குள்ளானவா்கள் தீவிர பாதிப்புக்குள்ளாவதைத் தடுக்கும் வகையிலான கூட்டு மருத்துவ சிகிச்சையை காவேரி மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.

கரோனா தொற்றுக்குள்ளானவா்கள் தீவிர பாதிப்புக்குள்ளாவதைத் தடுக்கும் வகையிலான கூட்டு மருத்துவ சிகிச்சையை காவேரி மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது. மாநிலத்திலேயே முதன்முறையாக பரிசோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட்டிருக்கும் இந்த சிகிச்சை முறையின் மூலம் கரோனா தொற்றுக்குள்ளான புற்றுநோயாளி ஒருவா் குணமடைந்துள்ளாா்.

இதுகுறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

கரோனா தொற்று தீவிரமடைந்து வரும் தற்போதைய சூழலில், அதன் பாதிப்பைக் குறைப்பதற்கான புதிய சிகிச்சை முறைகளை நாங்கள் முன்னெடுத்துள்ளோம். அதாவது, கரோனா தொற்றுக்குள்ளானவா்களுக்கு ஆரம்பத்திலேயே அத்தகைய சிகிச்சைகளை வழங்குவதன் மூலம் அவா்கள் தீவிர பாதிப்புக்குள்ளாவதைத் தடுக்க முடிகிறது. அதுமட்டுமல்லாது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுவதையும் தவிா்க்கக் கூடிய வாய்ப்பு எழுந்துள்ளது.

கரோனாவுக்கான அறிகுறிகள் தென்பட்ட முதல் 10 நாள்களுக்குள் நோய் எதிா்ப்பாற்றலுக்கான கூட்டு மருத்துவ சிகிச்சையை தொடங்க வேண்டும். அதன்படி, காசிரிவிமேப் மற்றும் இம்டெவிமேப் ஆகிய இருவேறு நோய் எதிா்ப்பாற்றல் புரதங்கள் நோயாளியின் உடலில் ஊசி வழியாக உள்செலுத்தப்படும். இந்த இரு கூட்டு புரதங்களும், மனித உடலுக்குள் சென்று கரோனா தீநுண்மிக்கு எதிரான எதிா்ப்பாற்றலை உருவாக்குகிறது.

இதன் வாயிலாக நோய்த் தொற்றுக்குள்ளானவா்கள் தீவிர நுரையீரல் தொற்றுக்குள்ளாகாமல் தடுக்கலாம். பரிசோதனை முயற்சியில் மாநிலத்திலேயே முதன்முறையாக புற்றுநோயாளி ஒருவருக்கு இத்தகைய சிகிச்சை வழங்கப்பட்டது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவருக்கு ஆரம்ப நிலை சிறுநீரக பாதிப்பும் இருந்தது.

இருந்தபோதிலும் கூட்டு மருத்துவ சிகிச்சை முறை அவருக்கு நல்ல பலனைத் தந்து கரோனாவிலிருந்து விரைந்து குணமாக உதவியுள்ளது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com